ஆத்தூரில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


ஆத்தூரில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2021 10:37 PM GMT (Updated: 6 Feb 2021 10:37 PM GMT)

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பிரபலங்களும், பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் நேற்று சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆத்தூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அணை அரசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, மாவட்ட பொருளாளர் ஓசுமணி, நரசிங்கபுரம் நகர தலைவர் ஜோதிபாசு, பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு வட்டார தலைவர் அர்ஜுனன், தலைவாசல் வடக்கு வட்டார தலைவர் ஆரகலூர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைது
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் மூடுதுறை கனகராஜ், வீரபாண்டி வடக்கு வட்டார தலைவர் ஆர்.கே.செட்டியார், அமைப்புச்சாரா மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருளானந்தம், சேலம் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆத்தூர் சதீஷ், ஏற்காடு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் சக்தி, ஓமலூர் தங்கதுரை, ஜலகண்டாபுரம் அரவிந்த், மாவட்ட செயலாளர்கள் நேதாஜி, பட்டுத்துரை ராஜேந்திரன், அழகுவேல், ஆசைத்தம்பி, பெத்தநாயக்கன்பாளையம் நகர தலைவர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Next Story