சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மேற்குவங்காள வாலிபர் சைக்கிள் பயணம் தஞ்சையில் போலீசார் வரவேற்பு


சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மேற்குவங்காள வாலிபர் சைக்கிள் பயணம் தஞ்சையில் போலீசார் வரவேற்பு
x

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மேற்குவங்காளத்தை சேர்ந்த வாலிபர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். தஞ்சை வந்த அவருக்கு போலீசார் வரவேற்பு அளித்தனர்.

தஞ்சாவூர்,

மேற்கு வங்காளம் மாநிலம் பலூர்காட் பகுதியை சேர்ந்தவர் மதாய்பவுல் (வயது27). இவர் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி சிலிகுடி பகுதியில் இருந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். மேற்கு வங்காளத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு அங்கிருந்து ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகம் வந்தார்.

தமிழகத்தில் சென்னை, வேலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதி வழியாக தஞ்சை வந்தார். தஞ்சை வந்த அவருக்கு ரெயில் நிலையம் பகுதியில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் தலைமையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ் குமார் மற்றும் போலீசார் வரவேற்றனர். பின்னர் மதாய்பவுலை உற்சாகப்படுத்தும் விதமாக, அவருக்கு பயணத்திற்கான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.

வரவேற்பு

இது குறித்து மதாய்பவுல் கூறுகையில், ‘‘சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் எனது பயணத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சாலை விதிகளை முறையாக பொதுமக்கள் கடைபிடிக்காமல் செல்வதால், விபத்து நடைபெறுகிறது. குறைந்தது நாள் ஒன்றுக்கு நமது நாட்டில், 400 சாலை விபத்துகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சாலை விதிகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தி, சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளேன். நாளொன்றுக்கு சுமார் 130 கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறேன். இதுவரை 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணத்தை நிறைவு செய்துள்ளேன். தொடர்ந்து தமிழகத்தில் திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து கேரளா, கர்நாடகா, மகாரா‌‌ஷ்டிரா ஆகிய மாநிலம் வழியாக 3 மாதங்களில் என பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன்’’ என்றார்.

Next Story