தஞ்சையில் அனைத்து ரெயில்களையும் இயக்கக்கோரி சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் அனைத்து ரெயில்களையும் இயக்கக்கோரி சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2021 6:20 AM GMT (Updated: 14 Feb 2021 6:20 AM GMT)

தஞ்சையில் அனைத்து ரெயில்களையும் இயக்கக்கோரி சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையம் அருகே சமூக நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் வக்கீல்கள் அன்பரசன், சந்திரகுமார், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் ஜீவக்குமார், தலைவர் அயனாபுரம் நடராஜன், பாபநாசம் சரவணன், முத்துக்குமரன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்து.உத்தராபதி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வழியாக இயங்கி வந்த மயிலாடுதுறை, திருச்சி, காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து பயணிகள் ரெயிலையும் முழுமையாக இயக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து பெருநகர - தொலைதூர விரைவு ரெயில்களையும் முழுமையாக இயக்க வேண்டும். விரைவு ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

கட்டண சலுகை

முதியோர் - மாற்றுத்திறனாளிகள் - பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு கட்டண சலுகை பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டப்பணி சேவைக்காக ரூ.11 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டு வெறும் ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. முழு தொகையையும் உடனே வழங்கி பணிகள் விரைந்து தொடங்கப்பட வேண்டும். அதேபோல அரியலூர் - தஞ்சை, தஞ்சை - பட்டுக்கோட்டை ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை துரிதமாக தொடங்கவேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் சதா.முத்துகிரு‌‌ஷ்ணன், எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டமன்ற தொகுதி தலைவர் ஜாஹிர்உசேன், மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் முடித்து வைத்தார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

Next Story