கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர்


கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர்
x
தினத்தந்தி 15 Feb 2021 12:14 AM GMT (Updated: 15 Feb 2021 12:17 AM GMT)

கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர். இதில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார்.

கோவை,


கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் நேற்று நடைபெற்றது. பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், சென்னையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி முடிவடைந்ததும் விமானம் மூலம் கோவை வந்தார். 

எல்.முருகன் பங்கேற்பு

நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கேரள மாநில இந்து தர்ம அமைப்பின் மாநில தலைவர் சசிகலா டீச்சர், பாரதீய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று நினைவு அஞ்சலி கூட்டத்தில் பேசினார்கள்.

போலீசார் பாதுகாப்பு

கூட்டத்தில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர், விசுவ இந்து பரிஷத் மாநில செயலாளர் லட்சுமணன் நாராயணன், பாரதீய ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, இந்து  முன்னணியை சேர்ந்த குணா, தனபால் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

இது தவிர இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, சிவசேனா, இந்து மகாசபா, ராமர் சேனா, சங்பரிவார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியையொட்டி கோவையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story