பிரதமர் மோடி பச்சை கொடியை அசைத்ததும் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மெட்ரோ ரெயில் புறப்பட்டு சென்றது


பிரதமர் மோடி பச்சை கொடியை அசைத்ததும் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மெட்ரோ ரெயில் புறப்பட்டு சென்றது
x
தினத்தந்தி 15 Feb 2021 5:33 AM GMT (Updated: 15 Feb 2021 5:33 AM GMT)

பிரதமர் நரேந்திரமோடி பச்சை கொடியை அசைத்ததும், வண்ணாரப்பேட்டையில் தயார் நிலையில் இருந்த மெட்ரோ ரெயில் திருவொற்றியூர் நோக்கி புறப்பட்டு சென்றது. பயணிகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை, 

சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு 32 ரெயில் நிலையங்கள் வழியாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் வரையிலான முதலாவது வழித்தடத்தில் (நீல வழித்தடம்) 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகளுக்காக ரூ.3 ஆயிரத்து 770 கோடி நிதி ஒதுக்கி, கடந்த 2016-ம் ஆண்டு பணிகளை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தற்போது இந்தபணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பச்சை கொடியை அசைத்து முதல் ரெயிலை தொடங்கி வைத்தார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்து மெட்ரோ ரெயிலை என்ஜின் டிரைவர் ரீனா திருவொற்றியூர் விம்கோ நகர் நோக்கி ஓட்டிச்சென்றார்.

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த விழாவிற்கு நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பாதையையும் சேர்த்து சென்னையில் 54 கிலோ மீட்டர் நீளத்துக்கு, 21 சுரங்கப்பாதை மற்றும் 18 உயர்த்தப்பட்ட பாதைகளில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதன் மூலம் வடசென்னை பயணிகள் சென்னை விமானநிலையத்துக்கு ஒரு மணி நேரத்தில் சென்று சேர முடியும். சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், கோயம்பேட்டில் உள்ள புறநகர் பஸ் நிலையம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போது திறக்கப்பட்ட பாதையில் டோல்கேட், திருவொற்றியூரில் உள்ள உயர்த்தப்பட்ட பாதையில் மாநகர போக்குவரத்து கழக பஸ் முனையம், வாகனம் நிறுத்தும் இடம், நடைப்பாதைகளுடன் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம்

ரெயில் போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து உயர்த்தப்பட்ட பாதையில் பணி முடியாமல் உள்ள திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் தவிர்த்து தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் ஒரு சில பணிகள் பாக்கி உள்ளன. அவை விரைவாக முடிக்கப்பட்டு விடும். திருவொற்றியூர் தேரடி ரெயில் நிலையம் பணிகள் முடியாததால் அந்த ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்பதில்லை.

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து வழிப்பாட்டு தலங்கள், சந்தை, பொழுதுபோக்கு இடங்கள், பஸ் நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், நட்சத்திர விடுதிகள், ஐகோர்ட்டு மற்றும் தூதரகங்களை எளிதில் அடையலாம். மற்ற பகுதிகளில் இயக்குவது போன்று வழக்கமான நேரத்தில், வழக்கமான கட்டணத்தில் இயக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர். சென்னை மருத்துவ கல்லூரி முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வி.வேணி ஜெயசந்திரன் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கூறியதாவது-

மக்களால் 5 ரூபாய் டாக்டர் என்று செல்லமாக அழைக்கப்படும் என்னுடைய கணவர் டாக்டர் ஜெயசந்திரன் தலைமையில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து மத்திய ரெயில்வே மந்திரிகளை நேரடியாக சந்தித்து குறைகள் தெரிவித்தது, பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலிகள் நடத்தப்பட்டதன் விளைவாக மெட்ரோ ரெயில் இன்று வடசென்னைக்கு சாத்தியமாகி உள்ளது.

தற்போது அவர் மறைந்த நிலையில் ரெயில் சேவையை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். வடசென்னை, தென்சென்னை என்ற பாகுபாடு குறைந்துவிடுகிறது. இப்பகுதிகளில் கூலித்தொழிலாளிகள், ஏழைகள் அதிகம் வசிப்பதால் இங்கு கட்டணத்தை குறைத்து அனைவரும் பயன்படுத்தும்படி செயல்படுத்த வேண்டும். விம்கோநகரில் இருந்து கும்மிடிப்பூண்டி, அத்திப்பட்டு வரை மெட்ரோ ரெயிலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story