தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டம் சாலை வசதி செய்து தர கோரிக்கை


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டம் சாலை வசதி செய்து தர கோரிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2021 8:57 PM GMT (Updated: 15 Feb 2021 8:59 PM GMT)

கோம்பேரி கிராம மக்கள் சாலை வசதி செய்து தர கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பேரி கிராமத்தை சேர்ந்த  கிராம மக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீெரன தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது தார்சாலை வசதி செய்து தர கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி உதவி கலெக்டர் பிரதாப், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் மற்றும் அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுைகயில், கோம்பேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்து தரக்கோரி கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இருந்தபோதிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் தார்சாலை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

சாலை அமைப்பதற்கான பணிகளை விரைவில் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story