வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் சாவு
வீட்டில் சமையல் செய்து சாப்பிட்ட சி.ஆர்.பி.எப். வீரர் திடீர் சாவு மனைவி, மகனுக்கு தீவிர சிகிச்சை.
ஆவடி,
ஆவடியை அடுத்த மிட்டனமல்லி காலனி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 54). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்(சி.ஆர்.பி.எப்.) தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கெரசம்மாள் (51). இவர்களுக்கு அமிர்தஞ்சன் (24) என்ற மகனும், ஆஸ்பி (21) என்ற மகளும் உள்ளனர்.
அமிர்தஞ்சன், அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஆஸ்பி, சென்னை லயோலா கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். வர்கீஸ் தனது குடும்பத்துடன் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டார். ஆனால் ஆஸ்பி உடல் நலக்குறைவால் அன்று உணவு அருந்தவில்லை.
இதற்கிடையில் உணவு சாப்பிட்ட வர்கீஸ், அவரது மனைவி கெரசம்மாள், மகன் அமிர்தஞ்சன் 3 பேருக்கும் சிறிதுநேரத்தில் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் போரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வர்கீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சு தன்மை கலந்து இருந்ததால் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு அதில் வர்கீஸ் உயிரிழந்து இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story