மதுரை அருகே பரவையில் வியாபாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்


மதுரை அருகே பரவையில் வியாபாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 22 Feb 2021 8:27 PM GMT (Updated: 22 Feb 2021 8:27 PM GMT)

மதுரை அருகே பரவையில் வியாபாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 75 பவுன் நகை, ரூ.2.20 லட்சம் மீட்கப்பட்டது

வாடிப்பட்டி
மதுரை அருகே பரவையில் வியாபாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 75 பவுன் நகை, ரூ.2.20 லட்சம் மீட்கப்பட்டது. 
கொள்ளை
மதுரை அருகே பரவை மீனாட்சி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சாமுவேல்(வயது 61). இவர் பரவை மார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பொன்ரூபி(58) என்ற மனைவியும், தனராஜ்(38), தனரூபன்(35) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் தனராஜ், தனது மனைவி எலிசபெத்துடன் வீட்டின் மாடியில் தங்கியுள்ளார். தனரூபனும், அவரது மனைவி கரோலின் ஜெனிபர்(25) கீழ் வீட்டில் தங்கியுள்ளனர். 
இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி இரவு சாமுவேலும், தனரூபனும் வழக்கம் போல் வியாபாரத்திற்காக வெளியே சென்று விட்டனர். பொன்ரூபியும், கரோலின்ஜெனிபரும் வீட்டில் இருந்தனர். தனராஜ் அவரது மனைவி எலிசபெத் இருவரும் மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 35 வயது மதிக்கக்தக்க வாலிபர் வீட்டிற்குள் புகுந்து பொன்ரூபி, கரோலின் ஜெனிபர் இருவரையும்  கை, கால்களை கட்டிப்போட்டார். அதன்பின் பீரோவை திறந்து அதில் இருந்த 140 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டான். 
75 பவுன் நகை
இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையடித்த வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் மதுரை நகரில் ஒரு வீட்டில் கொள்ளையடித்து சென்ற வாலிபர் முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். 
அப்போது அந்த வாலிபர் தஞ்சாவூர் அதிராமபட்டினத்தை சேர்ந்த முகமதுஉசேன்(28) என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், குற்றவியல் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 75 பவுன் நகை, ரூ.2.20 லட்சம் ஆகியவை மீட்கப்பட்டது.

Next Story