சோப்பு கம்பெனி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி


சோப்பு கம்பெனி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 23 Feb 2021 5:00 PM GMT (Updated: 23 Feb 2021 5:00 PM GMT)

ராணிப்பேட்டையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சோப்பு கம்பெனி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சோப்பு கம்பெனி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

வாலாஜா தாலுகா செட்டிதாங்கல் கிராமம் லாலாபேட்டை தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார். 

இவரது மனைவி பவித்ரா (39). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
இந்த நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் இன்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார். 

இதை பார்த்த, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். அதற்குள் ரமேஷ் தனது மீதும், குடும்பத்தினர் மீதும் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். 

போலி ஆவணங்கள் தயாரிப்பு

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை கைப்பற்றி அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தண்ணீர் ஊற்றினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில் 3 பேர்  போலி ஆவணங்கள் தயாரித்து, தனது நிலத்தை அவர்களுடைய நிலம் என்று கூறி தகராறு செய்தனர். இதுகுறித்து அரக்கோணம் பதிவாளர் நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுத்து 2 தரப்பிலும் விசாரணை செய்தனர். விசாரணையில் 3 பேரும் போலி ஆவணம் தயாரித்தது தெரியவந்தது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிடப்பட்டது. எங்கள்  இடத்தை சுற்றி இரும்பு வேலி அமைத்து பராமரித்து வந்தோம்.‌ இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இரும்பு வேலி மற்றும் கற்களை 3 பேரும் அகற்றிவிட்டு ஆக்கிரமிப்பு செய்ய முயல்கின்றனர். எங்களுக்கு மிரட்டலும் விடுக்கின்றனர். 

என்னுடைய இடத்தை அபகரிக்க முயற்சிக்கும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அவர்களை போலீசார் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



Next Story