மாவட்ட செய்திகள்

ரூ.10¼ கோடியில் புதுப்பொலிவு பெற்ற அய்யன் சாமந்தான் குளம் + "||" + smart city 10 crocs aiyyan kulam open

ரூ.10¼ கோடியில் புதுப்பொலிவு பெற்ற அய்யன் சாமந்தான் குளம்

ரூ.10¼ கோடியில் புதுப்பொலிவு பெற்ற அய்யன் சாமந்தான் குளம்
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதன்முதலாக ரூ.10¼ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அய்யன், சாமந்தான்குளம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதனை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதன்முதலாக ரூ.10¼ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அய்யன், சாமந்தான்குளம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதனை காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். 
ஸ்மார்ட் சிட்டி திட்டம் 
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 12 விதமாக பணிகள் ரூ.904 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன்குளம், கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள சாமந்தான்குளமும் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதன்முதலாக இந்த பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி ஒவ்வொரு குளமும் தலா ரூ.5 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்பட்டன. இதில் அய்யன்குளம் 0.7437 எக்டேரும், சாமந்தான் குளம் 0.5993 எக்டேரும் ஆகும்.
வரலாற்று முக்கியத்துவம் 
இந்த குளங்கள் தஞ்சை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குளம் ஆகும். நாயக்கர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பண்டைய தஞ்சை நகரில் நீர் மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட ஜலசுத்ரா என்னும் அமைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள குளங்கள் ஆகும். இந்த 2 குளங்களும் மிகவும் பாழடைந்த நிலையில் குளத்தின் சுற்று சுவர்கள் மற்றும் படித்துறைகள் இடிந்தும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது.
குளங்களின் உட்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டன. பயன்படுத்தாத நிலை காரணமாக 2 குளங்களும் குப்பைகள்கொட்டும் இடமாக காட்சி அளித்தது. மேலும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீரும் இந்த குளங்களில் விடப்பட்டது.
குளத்தில் நடைபாதை 
இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளங்களில் நிலத்தினை சமன்படுத்துதல், வர்ணம் பூசுதல், வேலி அமைத்தல், மின்வசதி செய்தல், குப்பை தொட்டிகள் அமைத்தல், திடக்கழிவுகள் மற்றும் செடி, கொடிகள் அகற்றுதல், நீர் வரத்தும் வெளியேறுதல் வசதிகள் அமைத்தல், கைப்பிடிகளுடன் கூடிய நடைபாதை சுற்றிலும் அமைத்தல், பக்கவாட்டு சுவர்கள், படித்துறைகள் மேம்படுத்துதல், புதிய நுழைவு வாயில் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் குளத்தை சுற்றிலும் கண்ணைக்கவரும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த குளங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டன. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை திறந்து வைத்தார். இதையடுத்து 2 குளங்களிலும் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நுழைவு வாயிலில் வாழை தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. ஆனால் எந்தவித கொண்டாட்டமும், ஆடம்பரமும் இன்றி தஞ்சையில் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவுக்கான கல்வெட்டு மட்டும் குளத்திற்கு செல்லும் வழியில் பக்கவாட்டு சுவரில் பதிக்கப்பட்டது.
சுற்றுலா வளர்ச்சி 
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தஞ்சை பெரியகோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த குளங்கள் இருக்கும். எனவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதனால் சுற்றுலாதுறை வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதான சின்னங்களை மீட்டெடுக்கும் வகையில் இது புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் மேலாண்மையில் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக அமையும்’’என்றனர்.