கடலூர் மாவட்டத்தில் கடும் பனி மூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
கடும் பனி மூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பனி மூட்டம்
கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மாசி மாதம் 2-வது வாரத்தை கடந்தும் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை கொட்டியது. பிப்ரவரி மாதம் பெய்த அதிகபட்ச மழையாக இது பதிவானது.
அதன்பிறகு காலையில் வெயிலும், மாலை நேரத்தில் கடும் குளிரும் நிலவி வந்தது. அதேபோல் நேற்று முன்தினம் மாலை முதல் குளிர் நிலவி வந்தது. இரவு நேரம் செல்ல, செல்ல பனி மூட்டமாக காட்சி அளித்தது. அதிகாலை பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், சாலைகள் தெரியாத அளவுக்கு பனி இறங்கி நின்றது.
முகப்பு வெளிச்சம்
இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது. கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கெடிலம் ஆற்றை, பார்த்த போது, ஆறு தெரியாத அளவுக்கு எங்கும் பனி மூட்டமாக இருந்தது.
சூரியன் உதித்தாலும், அதன் கதிர்கள் தெரியாத அளவுக்கு உறை பனியாக இருந்ததை பார்க்க முடிந்தது. குளிர் பிரதேசங்களில் இருக்கும் பனி மூட்டத்தை போன்று காட்சி அளித்ததாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
இதே போல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்த பனி மூட்டம் காலை 8.30 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும் சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story