உடுமலை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்


உடுமலை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 March 2021 6:38 PM GMT (Updated: 5 March 2021 6:38 PM GMT)

உடுமலை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரம்

போடிப்பட்டி, மார்ச்.6-
உடுமலை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விலை உயர்வை எதிர்பார்த்து, இருப்பு வைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மகசூல் இழப்பு
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் மானாவாரியில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர பிஏபி மற்றும் இறவைப் பாசனத்திலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது உடுமலை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் விலை உயர்வை எதிர்பார்த்து விவசாயிகள் மக்காச்சோளத்தை இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாகுபடியாக இருந்த மக்காச்சோளம் சமீப காலங்களாக கைவிட்டு விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்காச்சோள விவசாயிகள் ஏதேனும் ஒரு வகையில் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். ஒரு ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டால் இன்னொரு ஆண்டில் மழையால் பாதிக்கப்படுகிறது. இதுதவிர படைப்புழுக்கள், விலையின்மை என்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் பருவம் தவறிய மழையால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக அதிக அளவில் கோழித்தீவனம் உற்பத்திக்காகவே மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மக்காச்சோளம் அறுவடை காலத்தில் விலை குறைவு என்பது தொடர்கதையாகவே உள்ளது. இதற்கு கோழித்தீவன உற்பத்தியாளர்கள் வெளி மாநிலங்களிலிருந்து மக்காச்சோளத்தை கொண்டு வருவது ஒரு காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் திட்டமிட்டு விலை குறைப்பு செய்யப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
இந்தநிலையில் நடப்பு ஆண்டில் உற்பத்தி குறைவால் மக்காசோளம் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளத்தை இருப்பு வைத்து வருகிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.  
இதுகுறித்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:-
தற்போது மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ரூ.1,550 முதல் ரூ.1,650 வரை விற்பனையாகிறது. விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தற்போது இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இங்கு 5 ஆயிரம் டன் வரை மக்காச்சோளம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் இருப்பு வைப்பதற்கு போதிய இட வசதி உள்ளது. மேலும் பொருளீட்டுக்கடன் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story