கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி; கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு? கர்நாடக அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரை


கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி; கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு? கர்நாடக அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரை
x
தினத்தந்தி 20 March 2021 9:26 AM GMT (Updated: 20 March 2021 9:26 AM GMT)

கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரை செய்து நிபுணர்குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

சீனாவின் உகான் நகரில் உருவான கொேரானா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவி ருத்ரதாண்டவமாடியது.

கொரோனா 2-வது அலையா?
இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்பின்னர் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியதும் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது.இதற்கிடையே கொேரானாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, முன்கள பணியாளர்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அளவில் கொரோனா வைரஸ் குறைந்தளவே பதிவாகி
வந்தது. இதனால் மத்திய அரசும், மக்களும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதத்தை போல, இந்த ஆண்டு மார்ச் மாதமும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை தொடங்கி விட்டதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இரவு நேர ஊரடங்கு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கர்நாடக அரசின் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார். மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவத்தொடங்கியுள்ளது.இதனால் குறிப்பாக கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் பீதியடைந்துள்ளன. மராட்டியத்தில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரை செய்து கொரோனா தடுப்பு ஆலோசனை நிபுணர் குழு அரசுக்கு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்
“மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்தது தான். அதனால் கர்நாடகத்தில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் நாளுக்குள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். தகுதியான அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

நிபுணர் குழு அறிக்கை
கர்நாடகத்தில் தினமும் 1,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.”

இவ்வாறு சுதாகர் கூறினார்.

கொரோனா பரவல் வேகமெடுத்து இருப்பது மக்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story