பள்ளிப்பட்டு அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது


பள்ளிப்பட்டு அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2021 1:20 PM GMT (Updated: 2021-03-21T18:50:20+05:30)

பள்ளிப்பட்டு அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (வயது 45). ரியல் எஸ்டேட் தரகர். இவர் கடந்த மாதம் 24-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரூ சென்றார். அதன் பிறகு இம்மாதம் 3-ந் தேதி இவர் வீடு திரும்பினார்.அப்போது வீட்டில், பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதேபோல் கடந்த 16-ந் தேதி பள்ளிப்பட்டு தாலுகா சாமி நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் நாயுடு என்ற விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் வெளிநாட்டு கேமரா மற்றும் இரண்டு கைக்கெடிக்காரங்களை திருடி சென்றனர்.இந்த 2 திருட்டு வழக்குகள் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பட்டு போலீசார் திருடர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று பள்ளிப்பட்டு-நகரி செல்லும் சாலையில் தங்கம் பேட்டை கிராமம் அருகே ஆர்.கே. பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர்.அதில், திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக சென்னை இ.சி.ஆர்.சுனாமி நகர் பகுதி கண்ணகி நகரை சேர்ந்த அண்ணாமலை (29), பாண்டியன் (30), ராஜா (40) உள்பட 3 பேரையும் பள்ளிப்பட்டு போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடிய நகை, பணம், பொருட்களை கைப்பற்றி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story