குகை வழிப்பாதை இல்லாததால் சிரமத்துக்கு உள்ளாகும் மாணவிகள்


குகை வழிப்பாதை இல்லாததால் சிரமத்துக்கு உள்ளாகும் மாணவிகள்
x
தினத்தந்தி 21 March 2021 9:38 PM GMT (Updated: 21 March 2021 9:38 PM GMT)

மீன்சுருட்டியில் மேம்பால பணி நடைபெறும் பகுதியில் குகை வழிப்பாதை இல்லாததால் பள்ளி செல்லும் மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மீன்சுருட்டி:

சுற்றி வர வேண்டிய நிலை
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில், விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலைக்காக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் முத்துசேர்வாமடம் செல்லும் சாலையையே மீன்சுருட்டி கடைவீதி மற்றும் வெளி ஊர்களுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மீன்சுருட்டியில் முத்துசேர்வாமடம் செல்லும் சாலையையொட்டி உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவிகள் வந்து செல்கின்றனர். மேலும் அந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கோவில்கள், வாரச்சந்தைக்கு செல்லும் பொதுமக்களும் இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றனர்.
குகை வழிப்பாதை
ஆனால் தற்போது மேம்பால பணி நடைபெறும் இடத்தில் குகை வழிப்பாதை இல்லாததால், பாலப்பணி நடைபெறும் இடத்திற்கு மறுபுறம் வரும் மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் நீண்ட தூரம் சென்று முத்துசேர்வாமடம் சாலையில் திரும்பி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே இதை தவிர்க்கும் வகையில் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று மாணவிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story