ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு; கேரளா மாநில வாலிபர் கைது


ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு; கேரளா மாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 March 2021 3:23 AM IST (Updated: 28 March 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்த கேரளா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்த கேரளா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வங்கி ஊழியர்
கோவை வெற்றிவேல் நகரை சேர்ந்த ரமேஷ்பாபுவின் மனைவி பிரியா (வயது 39). மாற்றுத்திறனாளியான இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். 2 நாட்கள் வங்கி விடுமுறை என்பதால், பிரியா நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடியில் இருந்து கோவைக்கு புறப்பட்டார். அவர் மாற்றுத்திறனாளிக்கான பெட்டியில் பயணம் செய்தார்.
அவர் வந்த ரெயில் இரவு 9.15 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் 9.20 மணிக்கு கோவை நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் பெருந்துறை பகுதியில் சென்றபோது வாலிபர் ஒருவர் பிரியாவுக்கு அருகில் வந்தார். அவர் திடீரென பிரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். மேலும், அவரது கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் நகை, 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டார்.
அபாய சங்கிலி
இதையடுத்து ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து பிரியா ரெயிலை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர், நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். அதே பெட்டியில் பயணம் செய்த சகபயணியான சோமு என்பவர் உடனடியாக 1512 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ரெயில்வே போலீஸ் உதவி மையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த உதவி மையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனிடையே அந்த ரெயில் திருப்பூருக்கு சென்றது. இதைத்தொடர்ந்து பிரியா கொடுத்த புகாரின்பேரில் திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
இந்தநிலையில் பிரியாவிடம் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க ஈரோடு போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கொண்ட தனிப்படை உடனடியாக அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்று அதிகாலை சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அப்போது தொட்டிபாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனலூர் பகுதியை சேர்ந்த கோபியின் மகன் சுதர்சன் என்கிற குட்டி (வயது 28) என்பதும், அவர்தான் பிரியாவிடம் நகை, பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுதர்சனிடம் இருந்து 7 பவுன் நகை, 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் மீட்கப்பட்டது.
நகை, பணத்தை பறித்து சென்ற வாலிபரை சில மணி நேரங்களிலேயே கைது செய்த தனிப்படை போலீஸ் ஏட்டுகள் எஸ்.கண்ணன், வி.கண்ணன், லோகநாதன், போலீசார் ராஜவேலு, தேவராஜ், பிரபு, சரவணகுமார், ரவிக்குமார் ஆகியோரையும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேஷாத்திரி மற்றும் போலீசாரையும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.
ஈரோடு அருகே நள்ளிரவில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் நகை, பணத்தை வாலிபர் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story