மாவட்ட செய்திகள்

ஸ்டாலின் எவ்வளவு பொய் பேசினாலும் வெற்றி பெற முடியாது:அ.தி.மு.க. அரசு மீண்டும் தொடர மக்கள் முடிவு செய்து விட்டார்கள்திருச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + Edappadi Palanisamy told a public meeting in Trichy that the people had decided to resume the AIADMK government.

ஸ்டாலின் எவ்வளவு பொய் பேசினாலும் வெற்றி பெற முடியாது:அ.தி.மு.க. அரசு மீண்டும் தொடர மக்கள் முடிவு செய்து விட்டார்கள்திருச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஸ்டாலின் எவ்வளவு பொய் பேசினாலும் வெற்றி பெற முடியாது:அ.தி.மு.க. அரசு மீண்டும் தொடர மக்கள் முடிவு செய்து விட்டார்கள்திருச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஸ்டாலின் எவ்வளவு பொய் சொன்னாலும் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க.அரசு மீண்டும் தொடர மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திருச்சி, 
ஸ்டாலின் எவ்வளவு பொய் சொன்னாலும் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க.அரசு மீண்டும் தொடர மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சூறாவளி பிரசாரம்

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு, கார் மூலம் திருச்சிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். பின்னர், திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திறந்த வேனில் நின்றபடி அ.தி.மு.க.வேட்பாளர்கள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் (திருச்சி கிழக்கு), மு.பரஞ்சோதி (மண்ணச்சநல்லூர்), ப.குமார், (திருவெறும்பூர்), பத்மநாதன் (திருச்சி மேற்கு), கு.ப.கிருஷ்ணன் (ஸ்ரீரங்கம்), செல்வராசு(முசிறி), சந்திரசேகர்(மணப்பாறை), இந்திரா காந்தி(துறையூர் (தனி)) மற்றும் கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் (லால்குடி) ஆகியோருக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பொய்யான செய்தி பரப்பும் ஸ்டாலின்

எம்.ஜி.ஆர். காலத்திலும் திருச்சி மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை. ஜெயலலிதா இருந்த போதும் திருச்சி மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை. அவர் மறைவுக்கு பின்னரும் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடுகிற கழக வெற்றி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி த.மா.கா. வேட்பாளர் ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகி ஜெயலலிதாவின் ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்.
தமிழகத்தில் பல திட்டங்களையும், நன்மைகளையும் செய்து நிறைவேற்றி இருக்கிறோம். 

ஆனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்னென்னமோ பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை தொடர்ந்து மக்களிடத்தில் சொல்லி அனுதாபம் தேடி, அரசியல் நாடகம் ஆடி தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்புகிறார். திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க. அரசு செய்த சில திட்டங்களை இங்கே பட்டியலிட்டு காட்டுகிறேன்.

புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும்

தமிழகத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஏழை, எளியோர் அந்த இடங்களில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 60 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. இது சாதனை இல்லையா? அதுபோல திருச்சி மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். 

இன்னும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருச்சி புறநகர் மாவட்டத்தில் நிலமும் இன்றி, வீடும் என இரண்டும் இல்லாத ஏழைகளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். சாதி பாகுபாடே பார்க்க மாட்டோம். பாலக்கரை பகுதி மக்களுக்கு சொந்தமாக அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்கப்படும்.
அதேபோன்று பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும். ஆதிதிராவிடர் மக்கள் அரசு மூலம் வீடு கட்டி அது தற்போது குடியிருக்க தகுதி இல்லாத வீடுகளாக இருந்தால், அதற்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

‘நீட்’ கொண்டு வந்தது யார்?

இன்றைக்கு ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் ‘நீட்’ தேர்வு குறித்து பேசி வருகிறார். ‘நீட்’-டை கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான். 2010-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தது. அப்போது தி.மு.க. எம்.பி.க்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். அந்த வேளையில் மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி, மத்தியிலும் தி.மு.க. ஆட்சி. அந்த காலக்கட்டத்தில்தான் நீட் கொண்டு வரப்பட்டது. எனவே, நீட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது காங்கிரசும், தி.மு.க.வும்தான். அண்ணா தி.மு.க. அல்ல. தமிழகத்தில் நீட் வரக்கூடாது என கடுமையாக ஜெயலலிதா முயற்சி எடுத்தார். இன்றைக்கும் அதே நிலைப்பாட்டுடன் தான் இருக்கிறோம்.

இருந்தாலும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவர்களாக, பல் மருத்துவர்களாக வேண்டும் என்ற ஏழை மாணவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்றி அமல்படுத்தினோம். நானும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதை உணர்ந்து என் மனதில் பட்டதை செய்தேன்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக அரசு பள்ளியில் படித்த 435 பேர் மருத்துவர்களாக கல்லூரியில் சேர்ந்துள்ளனர். மேலும் ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரியை நாம் தொடங்கி இருக்கிறோம். இது வரலாற்று சாதனை. 

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோல செய்தது கிடையாது. ஸ்டாலின் அவர்களே... ஒண்ணும் செய்யவில்லை என்று சொல்கிறீர்களே, ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது சாதனை இல்லையா?. அங்கு 1,650 பேர் புதிதாக மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் கூட இல்லாத மருத்துவ வசதி அங்கு கிடைக்கும். அங்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும். அதுதான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவு. அந்த இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை எங்கள் அரசு நனவாக்கி கொண்டிருக்கிறது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகளில் அடுத்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கூடுதலாக 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிட்டும்.

கோதாவரி-காவிரி திட்டம்

ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்தில் வாதாடி, போராடி தண்ணீரை பெற்று வருகிறோம். அதுவும் உபரி நீரைத்தான் திறந்து விடுகிறார்கள். காவிரி நதிநீரை நம்பிதான் பல மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு ஏங்கி கொண்டிருக்கிறார்கள். எனவே, டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக ஸ்டாலின் ஒருநாளாவது பேசி இருப்பாரா?.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை நான் ஒரு விவசாயி. உழைக்கிறவர்கள் வாழ வேண்டும். விவசாயம் செழித்தால் நாடு செழிக்கும். 

அந்த வகையில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் இன்றும் கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு உதவிட தெலுங்கானா முதல்-மந்திரி சொல்லி இருக்கிறார். ஆந்திர முதல்-மந்திரியும் கோதாவரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தடையில்லை என்று சொல்லி இருக்கிறார். இப்படிப்பட்ட திட்டத்திற்கு என்றாவது தி.மு.க. முயற்சி எடுத்ததுண்டா?. அத்திட்டத்திற்கு நிதி வேண்டும், சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும். மத்திய அரசின் அனுமதியும் வேண்டும்.

அதைத்தான் பிரதமரிடம் கூறி இருக்கிறேன். எனவேதான், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். நமக்கு மக்கள்தான் முக்கியம். அவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் இணக்கம் வேண்டும். அதிகாரத்திற்காக அ.தி.மு.க. கிடையாது. தி.மு.க.மாதிரி மத்தியில் ஆட்சி, அதிகாரம் வேண்டும் என நாங்கள் பார்க்கவில்லை. மக்களின் நன்மைதான் முக்கியம். எனவே, மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் எப்போதுமே தண்ணீர் பிரச்சினை இருக்காது.
விவசாயிகள் வறட்சி
டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். அப்போது அரசே இடுபொருட்கள் மானியம் வழங்கியது. ரூ.2747 கோடி வழங்கி சாதனை படைத்தது. அதுபோல பயிர்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயிர்கள் இயற்கை சீற்றத்தால் சேதமடைந்தது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் அவர்களுக்கு ரூ.9,300 கோடி பெற்று கொடுத்துள்ளோம்.
வறட்சி, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் வங்கியில் வாங்கிய பயிர்க்கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதெல்லாம் சாதனை இல்லையா?. தி.மு.க. ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அறிக்கை வெளியிடும். ஆனால், அவை நிறைவேற்றாது. நிலம் இல்லாத விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக சொன்னார்கள். கொடுத்தார்களா? இல்லை. ஆனால், மக்களை ஏமாற்றுவார்கள்.
நமது அரசுக்கு வருண பகவான் கருணை இருக்கிறது. இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. தெய்வம் நமக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. ஆதலால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எவ்வளவு பொய் பேசினாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் எவ்வளவு தில்லுமுள்ளுகள் செய்தாலும் வெற்றி பெறமுடியாது. உண்மையை பேசினால் தான் மக்கள் நம்புவார்கள்.
ஐ.எஸ்.ஐ. முத்திரை
அ.தி.மு.க. என்பது ஐ.எஸ்.ஐ. முத்திரை போன்ற கட்சி. நான் விவசாயி என்பதால் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறேன். அவர்களின் வாழ்விற்காக சிந்திக்கிறேன். ஆனால் விவசாயிகளை பற்றி கவலைப்பட்டது உண்டா?
காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் கடைமடை பகுதி வரை சுத்தமான தண்ணீராக நமக்கு கிடைக்கும்.
மக்கள் தான் நீதிபதிகள்
கல்வியில் நமது அரசு பல புரட்சிகளை செய்து இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 52 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.7339 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டசபைக்கு ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் சென்று உள்ளேன். தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே எந்த ஒரு முதல்-அமைச்சரும் இப்படி லீவு எடுக்காமல் வந்தது கிடையாது. ஸ்டாலின் என்னைப்பற்றி என்ன சொன்னாலும் அதனை சந்திக்க தயார். அவர் சொல்வது பற்றி எனக்கு கவலை இல்லை. மக்கள் தான் நீதிபதிகள்.
மீண்டும் அ.தி.மு.க. அரசு
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு தான். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். ஸ்டாலின் என்னை பார்த்து சொல்கிறார் ஊழல் என்று. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. நான் ஆட்சிக்கு வந்ததும் ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பேன் என்கிறார் ஸ்டாலின். அவர் ஆட்சிக்கு வருவதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க. அரசு மீண்டும் தொடர மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
2019-ம் ஆண்டு ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. தமிழ் நாடு முழுவதும் சென்று மனுக்கள் வாங்கினாரே? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
ஊழல் சத்தம்
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் ஸ்டாலின். கட்சி சொன்னதால் நான் கையெழுத்திட்டேன் என ஸ்டாலின் அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். இதற்கான ஆதாரம் இருக்கிறது. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நடத்தி வரும் கல்லூரிகளை தட்டினால் ஊழல் ஊழல் என சத்தம் வரும்.
நான் பாம்பா?
எடப்பாடி பழனிசாமி பல்லி, பாம்பை விட விஷதன்மை கொண்டவர் என ஸ்டாலின் பேசி இருக்கிறார். நான் மனிதன். பாம்பும் அல்ல. பல்லியும் அல்ல. ஆனால் சொந்த அண்ணனை கூட ஏற்றுக்கொள்ளாமல் கட்சியை விட்டு நீக்கியவர் தான் ஸ்டாலின். இப்படி இருக்கிற அவர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற போகிறார்?
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நமது அரசு அமைந்ததும் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும். மாதம் ரூ.1500 உதவி தொகை வழங்கப்படும். முதியோர் உதவி தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். 100 நாள் வேலை தி்ட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவர்களை பெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.