இளைஞர்கள் சுய உதவி குழு தொடங்கப்படும் திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வாக்குறுதி


இளைஞர்கள் சுய உதவி குழு தொடங்கப்படும் திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வாக்குறுதி
x
தினத்தந்தி 4 April 2021 4:15 AM GMT (Updated: 4 April 2021 4:05 AM GMT)

திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் சிந்தாமணி, சத்திரம் பஸ் நிலையம், சின்னகடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி, 

திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் சிந்தாமணி, சத்திரம் பஸ் நிலையம், சின்னகடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் வீடுவீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். கடைவீதிகளில் ஜீப்பிலும் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு பெண்களுக்கு உள்ளது போன்று இளைஞர்களுக்கும் இளைஞர் சுய உதவி குழு தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். மேலும் அவர் பேசுகையில் 'திருச்சி மாநகர பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்துடன் பேசி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன். மீண்டும் அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகள் வைத்து குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி செய்வேன். அதேபோல் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களில் அதனை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். 24 மணி நேரமும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவர பாடுபடுவேன் என்றார். பிரசாரத்தின் போது, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை வழங்கியும் வரவேற்றனர்.

பிரசாரத்தின் போது, மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு, காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Next Story