சிட்கோவின் முன் அனுமதி பெறாமல் மா.சுப்பிரமணியன் விதிகளுக்கு புறம்பாக வீட்டை இடித்து கட்டியது தவறா? இல்லையா? சைதை துரைசாமி மீண்டும் கேள்வி


சிட்கோவின் முன் அனுமதி பெறாமல் மா.சுப்பிரமணியன் விதிகளுக்கு புறம்பாக வீட்டை இடித்து கட்டியது தவறா? இல்லையா? சைதை துரைசாமி மீண்டும் கேள்வி
x
தினத்தந்தி 4 April 2021 5:52 AM GMT (Updated: 4 April 2021 5:52 AM GMT)

சிட்கோவின் முன் அனுமதி பெறாமல், மா.சுப்பிரமணியன் விதிகளுக்கு புறம்பாக வீட்டை இடித்துக்கட்டியது தவறா? இல்லையா? என்று சைதை துரைசாமி மீண்டும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சென்னை, 

சைதாப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி, தி.மு.க. சார்பில் போட்டியிடும் மா.சுப்பிரமணியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு மா.சுப்பிரமணியனும் நேற்று முன்தினம் பதில் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சில கேள்விகளை சைதை துரைசாமி நேற்று முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக சைதை துரைசாமி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிட்கோ இடத்தில் மேற்கூரை மட்டும் தான் என்னுடைய சொத்து, அடிமனை சிட்கோவின் வசம் இருக்கிறது என்று மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இதிலேயே அவர் செய்த தில்லுமுல்லு தெரிகிறது. சிட்கோ தொழிலாளர் குடியிருப்பு தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் சொந்தம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தவறா? இல்லையா?

சட்டவிதிகளுக்கு புறம்பாக இவர் பணம் கொடுத்து வாங்கியிருப்பதாக அவரே கூறுகிறார். தொழிலாளர் குடியிருப்பு அவர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் உரிமை. அதன் அடிப்படையில் தான் தொழிலாளர் எஸ்.கே.கண்ணனின் மகள் காஞ்சனா (மா.சுப்பிரமணியன் மனைவி) என்று விண்ணப்பிக்கிறார்கள்.

சிட்கோவின் இடத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டு, நில உரிமையாளராக இருக்கும் சிட்கோவிடம் அவர் அனுமதி பெற்று கட்டிடத்தை இடித்தாரா?. இதைத்தான் நில அபகரிப்பு என்று சொல்லி வருகிறேன். நிலத்தின் உரிமையாளராக இருக்கும் சிட்கோவிடம் அனுமதி பெறாமல், விதிகளுக்கு புறம்பாக இடித்தது தவறா? இல்லையா?.

நில அபகரிப்பா? இல்லையா?

அப்படி இடித்தது மட்டுமல்லாமல், அங்கு மீண்டும் கட்டிடம் கட்டுவதற்கு வரைபட அனுமதி பெறாமலேயே மேயராக இருந்த அவர் வீடு கட்டுகிறார். அதேபோல் சிட்கோ பெயரில் இருந்த மின் இணைப்பை அதிகார துஷ்பிரயோகம் செய்து அவருடைய மனைவி பெயரில் மாற்றி இருக்கிறார். நில உரிமை மாறாமல் இருக்கையில், சிட்கோவுக்கு தெரியாமல் இவையெல்லாவற்றையும் செய்தது நில அபகரிப்பா? இல்லையா?.

இதுதொடர்பாக மா.சுப்பிரமணியன் மீது 6 விதமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஒத்துக்கொண்டு இருக்கிறார்

ஆக நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்களை தயார் செய்து சிட்கோவில் விண்ணப்பித்துள்ளார். அதில் தான் எல்லா போலி ஆவணங்களும் இருக்கின்றன. இப்படி இந்த தவறுகளை செய்துவிட்டு, தான் எதையும் செய்யவில்லை என்று சொல்கிறார் என்றால், அவருடைய நாணயத்தையும், கிரிமினல் சிந்தனையையும் பாருங்கள்.

இந்த வழக்கு புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் சொல்லி இருப்பது போல சிட்கோவின் நில உரிமை சிட்கோவுக்கு சொந்தமானது. மேற்கூரை தான் எனக்கு என்று சொல்கிறார். இந்த 2 வரிகளில் அவர் மிகப்பெரிய தவறுகளை செய்திருப்பதாக ஒத்துக்கொண்டு இருக்கிறார். நீதிமன்றம் இவருக்கு தண்டனை வழங்க இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story