மாமல்லபுரம் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்களை பாதுகாக்க மரத்தடுப்புகள் தொல்லியல் துறையினர் நடவடிக்கை

மாமல்லபுரம் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்களை பாதுகாக்க மரத்தடுப்புகள் தொல்லியல் துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 April 2021 4:42 AM GMT (Updated: 5 April 2021 4:42 AM GMT)

காதல் ஜோடிகள் தங்கள் பெயர்களை எழுதி அசிங்கப்படுத்துவதால் மாமல்லபுரம் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்களை பாதுகாக்கும் வகையில் மரத்தடுப்புகள் அமைத்து தொல்லியல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாமல்லபுரம், 

காதல் ஜோடிகள் தங்கள் பெயர்களை எழுதி அசிங்கப்படுத்துவதால் மாமல்லபுரம் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்களை பாதுகாக்கும் வகையில் மரத்தடுப்புகள் அமைத்து தொல்லியல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவர்த்தனகிரி குடைவரை சிற்பம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் வடிக்கப்பட்ட ஏராளமான குடைவரை கோவில்கள், சிற்பங்கள் உள்ளன. இவற்றை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பாறை சிற்பம் அருகில் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பம் முக்கிய புராதன சின்னமாக திகழ்கிறது.

பக்தர்கள் மழையில் நனையாமல் பாதுகாக்க கிருஷ்ண பகவான் கோவர்த்தன மலைக்குன்றை குடையாக பயன்படுத்திய காட்சிகளை இங்கு பாறைக்குன்றின் விளிம்பில் பல்லவர்கள் சிற்பமாக வடிவமைத்துள்ளனர்.

மரத்தால் தடுப்புகள்

இந்த கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்களை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் சிற்பங்களை கைகளால் தேய்த்தும், உரசிய நிலையில் நின்று செல்பி எடுப்பதால் சிதைந்து அதன் தொன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா வரும் காதல் ஜோடிகள் சிலர் சிற்பங்களின் மீது தங்கள் பெயர்களை எழுதியும், காதல் சின்னத்தையும் வரைந்தும் சேதப்படுத்துகின்றனர்.

இதனால் இந்த சிற்பங்களை பாதுகாக்கும் வகையில் சிற்பங்களின் அருகில் சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் செல்வதை தடுக்கும் வகையில் தேக்கு மரத்தால் தடுப்புகள் அமைத்து மாமல்லபுரம் தொல்லியல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மர தடுப்புகளை தாண்டி உள்ளே யாரும் செல்லக்கூடாது என்று எழுதப்பட்ட தகவல் பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

Next Story