மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ‘சீல்’ வைப்பு


மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 7 April 2021 5:46 PM GMT (Updated: 7 April 2021 5:46 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில்(தனி), கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி(தனி), புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் 3,001 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.
இந்த தேர்தல் இரவு 7 மணியுடன் முடிவடைந்தது. இதில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் உள்ள 679 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்குப்பதிவு முடிவடைந்து, 816 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும், 875 வி.வி.பேட் எந்திரங்களும் பெட்டிகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சீல் வைப்பு

பின்னர் அந்தந்த பகுதி் மண்டல அலுவலர்களால் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை சரி பார்க்கப்பட்டது. தொடர்ந்து அவை அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் பணி விடிய விடிய நடைபெற்றது. பின்னர் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
 நேற்று காலை 8.45 மணி அளவில் தேர்தல் பொது பார்வையாளர் ஓம் பிரகாஷ் மற்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பூட்டி, கடலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரன் சீல் வைத்தார்.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 640 வாக்குச்சாவடி மையங்களிலும் பயன்படுத்தப்பட்ட தலா 769 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும், 826 வி.வி.பேட் எந்திரங்களும் ஓட்டுப்பதிவு முடிந்ததும், வாகனங்களில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பண்ருட்டி பணிக்கன்குப்பம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு  கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. 

விருத்தாசலம்

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 355 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டன. விருத்தாசலம் நகரில் உள்ள மின்னணு எந்திரங்கள் இரவிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் தொலைவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் விடிய, விடிய வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து கொண்டிருந்தன. இவை அனைத்தும் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டிடத்தில் முதல் தளத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டன. இதனை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திட்டக்குடி 

இதனை தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் ஓம் பிரகாஷ், தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசீலன், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், வேட்பாளர்கள் முகவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை திறந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த அறை கதவு பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. 
இதேபோல் திட்டக்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு எந்திரங்களும் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையும் சீல் வைக்கப்பட்டது. 

சிதம்பரம் 

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டார். 
பின்னர் நேற்று காலை 9 மணி அளவில் 3 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. அப்போது சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் ஒகிரே, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், தாசில்தார் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது முதலாவது துணை ராணுவத்தினரும், 2-வதாக சிறப்பு காவல் படையினரும், 3-வதாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வாக்கு எண்ணும் மையங்கள் அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Next Story