கடலூர் வாக்கு எண்ணும் மையத்தில் 260 துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பு


கடலூர் வாக்கு எண்ணும் மையத்தில் 260 துணை ராணுவத்தினர், போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 3:14 PM GMT (Updated: 8 April 2021 3:14 PM GMT)

கடலூர் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 260 துணை ராணுவத்தினர், போலீசார் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 6-ந்தேதி தேர்தல் நடந்தது. அன்று வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் தனித்தனியாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீசார்

அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது முதலில் உள்ளூர், 2-வது துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார், 3-வது வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என சுழற்சி முறையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

இது தவிர 18 ஆயுதப்படை போலீசார், 42 துணை ராணுவத்தினர் என மொத்தம் 260 பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கூடுதலாக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுகின்றனர். அவர்களும் இவர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

Next Story