மாவட்ட செய்திகள்

மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் + "||" + Seized 3 trucks loaded with medical waste

மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல்

மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல்
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த 3 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த 3 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மருத்துவ கழிவுகள்

தமிழக-கேரள எல்லையில் பொள்ளாச்சி அருகே செமனாம்பதி உள்ளது. இங்கு உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி, குழி தோண்டி புதைப்பதாக அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் இரவு பகலாக தீவிர கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு 3 லாரிகளில் கழிவுகளை ஏற்றிக் கொண்டு தோட்டத்திற்குள் சென்றன. 

பின்னர் அந்த லாரிகளை ஓட்டி வந்தவர்கள் தோட்டத்து நுழைவு வாயிலை மூடிவிட்டு உள்ளே சென்றனர். 

பொதுமக்கள் சிறைபிடிப்பு 

இதை அறிந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நுழைவு வாயிலை தாண்டி உள்ளே குதித்து தோட்டத்துக்குள் சென்றனர். பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்ததும், டிரைவர்கள் லாரிகளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்கள்.

இதையடுத்து அங்கு நின்றிருந்த 3 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பொதுமக்கள் சிறைபிடித்தனர். 

அத்துடன் இது குறித்து ஆனைமலை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 

3 லாரிகள் பறிமுதல் 

மேலும் இது குறித்து தகவல் அறிந்த ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த 3 லாரிகளில் மருத்துவ கழிவுகள் உள்பட ஏராளமான கழிவுகள் இருப்பதும், அவற்றை அங்கு குழி தோண்டி புதைக்க கொண்டு வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து அந்த 3 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை 

கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டி உள்ளனர். இந்த தோட்டம் கேரளாவை சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 

இந்த 3 லாரிகளும் சோதனை சாவடியை கடந்து வந்ததா அல்லது மாற்றுப்பாதையில் வந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

விசாரணையில், சோதனை சாவடி வழியாகதான் வந்தது என்பது உறுதி செய்யப்பட்டால், அங்கு பணியில் இருந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். 

மேலும் லாரிகளை ஓட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.