பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல் அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகே முன்னிலைகோட்டை ஊராட்சி ஆரியநல்லூரை சேர்ந்தவர் நிக்சன்பால். தி.மு.க. நிர்வாகி.
இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் இடையே ஆத்தூர் தொகுதி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று ஆரியநல்லூரில் உள்ள அலெக்ஸ் வீட்டுக்கு அருகே நிக்சன்பால், அலெக்ஸ் ஆகிய இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவரையொருவர் அரிவாள், கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
மோதலில் பிளஸ்-1 படிக்கும் அலெக்சின் மகன் இன்பெண்ட் (வயது 16) தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த மோதலில் காயம் அடைந்த இன்பெண்ட், பவுல்ராஜ் (32) உள்பட 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசில் இன்பெண்ட் கொடுத்த புகாரின் பேரில் நிக்சன்பால் (50), சவரிமுத்து (58), பவுல்ராஜ் (32) உள்பட 7 பேர் மீதும், பவுல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் அலெக்ஸ் (45) உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story