கொரோனா ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு: ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு துணிகள் அனுப்புவது நிறுத்தம்


கொரோனா ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு: ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு துணிகள் அனுப்புவது நிறுத்தம்
x
தினத்தந்தி 10 April 2021 4:14 AM IST (Updated: 10 April 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு உள்ளதால் ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு துணிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு
கொரோனா ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு உள்ளதால் ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு துணிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டு உள்ளது.
ரயான் துணி
ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் ரயான் ரக துணிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் வணிகர்களிடையே ஏற்பட்டு உள்ளது. மேலும் மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இரவில் முழு ஊரடங்கும், பகலில் பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளதால், ஜவுளி உற்பத்தி தொடர்பான பணிகள் பாதிப்படைந்து உள்ளது.
பணிகள் பாதிப்பு
இதனால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-
மராட்டியம், குஜராத், டெல்லி, மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ரயான் துணி வாங்குகின்றனர். வடமாநிலங்களில் இரவு நேரங்களில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் ஜவுளி சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தம்
இதனால் கடந்த 10 நாட்களாக புதிய ஆர்டர்கள் ஈரோட்டிற்கு வருவது குறைந்துவிட்டது. பணம் பெறுவதிலும் சிக்கல் நிலவி வருகின்றது. வடமாநில ஆர்டர் இல்லாத நிலையில் துணி விலை மேலும் உயர்கிறது.
ஈரோடு பகுதியில் தினமும் 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தியாகும் நிலையில் தற்போது உற்பத்தியை குறைத்து, 5 லட்சம் மீட்டர் தான் உற்பத்தி செய்கிறோம். மேலும் கொரோனா ஊரடங்கு எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் வெளிமாநிலங்களுக்கு தற்போது துணிகள் அனுப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story