திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 165 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 165 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் சவுடு மண் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் தனி நபர் ஒருவருக்கு அனுமதி அளித்தது.
ஆனால், சவுடு மண் குவாரிக்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று காலை கிராம பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்மஸ்ரீ பப்பி, தரணேஸ்வரி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், சவுடு மண் குவாரியை நிரந்தரமாக மூடுவதாக உறுதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், கிராம மக்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு விட்டு குவாரியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவும் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு போராட்டத்தை தொடர முடிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை பரபரப்பு நிலவியது.