உளுந்து பயிரில் பரவும் மஞ்சள் தேமல் நோய்
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பரவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தா.பழூர்:
விதைப்பு பணி தாமதம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தா.பழூர், சிந்தாமணி, இருகையூர், காரைக்குறிச்சி, கார்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போதைய பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உளுந்து விதைக்கும் பருவத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் சுமார் ஒரு மாதம் தாமதமாக விதைப்பு பணிகள் நடைபெற்றன.
சரியான பட்டத்தில் விதை விதைக்கப்படாததாலும், தொடர்ந்து மழை பெய்து மண்ணின் தன்மை மாற்றம் அடைந்ததாலும் வழக்கத்தைவிட விளைச்சல் மிகக்குறைந்த அளவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே தொடர் மழை காரணமாக தாமதமாக முளைத்த உளுந்து பயிர் வழக்கமான அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை. விவசாயிகள் எப்படியாவது நல்ல மகசூலை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு உரக்கடைகளில் ஆலோசனை பெற்று அவர்களுடைய சக்திக்கு மீறி செலவு செய்து பயிரை காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
மஞ்சள் தேமல் நோய்
இந்நிலையில் திடீரென உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் ஏற்பட்டு பரவத்தொடங்கி இருக்கிறது. தாமத விதைப்பு காரணமாக வழக்கமான மகசூலை விட குறைந்த மகசூல் கிடைக்கும் என்ற நிலையை தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள மஞ்சள் தேமல் நோயால் முற்றிலும் உளுந்து பயிரில் நாசம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உளுந்து வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி உளுந்து பயிரை தேமல் நோயில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story