ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி


ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி
x
தினத்தந்தி 16 April 2021 9:56 PM GMT (Updated: 16 April 2021 9:56 PM GMT)

8-ம்வகுப்பிற்கான இணைப்பு பாடங்களை காணொலிகளாக தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டு, ஆசிரியர்களுக்கு அதுகுறித்த வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.

உடுமலை
8 ம்வகுப்பிற்கான இணைப்பு பாடங்களை காணொலிகளாக தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டு, ஆசிரியர்களுக்கு அதுகுறித்த வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பேரிடர் காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பாடங்கள், கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமுதாய வானொலியிலும் தொடர்ச்சியாக பாடங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பாடங்கள் தொடர்ச்சியாக காணொலிகளாகவும், ஒலிப் பாடங்களாகவும் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டு அவை காணொலியில் ஒளிபரப்பப்பட்டும், வானொலியில் ஒலிபரப்பப்பட்டும் வருகிறது.
8 ம்  வகுப்பு  மாணவர்களுக்கு
இதன் தொடர்ச்சியாக 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இணைப்பு பாடங்கள் (பிரிட்ஜ் கோர்ஸ்), செயல்பாடுகளுடன் கூடிய காணொலிகளாக தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி உடுமலை வாசவி நகரில் உள்ள பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சிக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது இந்தப் பேரிடர் காலகட்டத்திலும் பல்வேறு காணொலிகளையும் ஒலிப் பாடங்களையும் நாம் தயாரித்து சென்னைக்கு அனுப்பி அவை காணொலியில் ஒளிபரப்பப்பட்டும், வானொலியில் ஒலிபரப்பப்பட்டும் வருகிறது. இதன் மூலம் குக்கிராமத்தில் உள்ள மாணவர்களும் தொலைக்காட்சி மூலமாகவும், வானொலி மூலமாகவும் பாடங்களை கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
காணொலி பாடங்கள்
8-ம் வகுப்புக்கான இணைப்பு பாட பயிற்சிகட்டகம் (புத்தகம்) காணொலிகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே 8-ம் வகுப்பு இணைப்பு பாடங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமாறு  காணொலிகளாக தயாரிக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரான, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பாபி இந்திரா பேசும்போதுஇந்த இணைப்பு பாடங்களை எவ்வாறு காணொலிகளாக தயாரிக்க வேண்டும், அதற்கு ஆசிரியர்கள் தங்களை எவ்வாறு தயார் படுத்திக்கொண்டு அந்த செயல்பாடுகளை சிறப்பாக நடத்த தயார் ஆகி வர வேண்டும் என்பது பற்றிஎடுத்துரைத்தார். 
முதுநிலை விரிவுரையாளர் சுப்பிரமணி பேசும்போது, இந்த இணைப்பு பாடங்கள் முழுவதும் செயல்பாடுகளாக அமைந்திருப்பதால் அந்த செயல்பாடுகளை ஆசிரியர்கள் பொருட்களை பயன்படுத்தியோ, தொழில்நுட்ப ரீதியாகவோ அந்த செயல்பாடுகள் முழுமையாக மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் தங்களை தயார் செய்து கொண்டு படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்றார்.
தொழில்நுட்பம்
 தொழில்நுட்ப வல்லுனரான ராகல்பாவிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் பவர்பாயிண்ட், படங்கள் அனிமேஷன் ஆகியவற்றை செயல்பாடுகளில் சேர்த்து அந்த செயல்பாடுகள் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி காணொலிகளாக தயாரிப்பது பற்றி எடுத்துரைத்தார். ஆசிரியர்கள் பாட கருத்தினை முழுமையாக திட்டமிட்டு எந்தெந்த இடத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மாணவர்களுக்கு எளிமையாக புரியும் என்பதைக் கூறினால், அதற்கு தகுந்தாற்போல இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காணொலிகளை நாம் தயாரிக்கலாம் என்றும்தெரிவித்தார்.
இந்த பயிற்சியில் 8-ம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் ஆசிரியர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

Next Story