விழுப்புரத்தில் முதியவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.5.65 லட்சம் மோசடி பெண் கைது


விழுப்புரத்தில் முதியவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.5.65 லட்சம் மோசடி  பெண் கைது
x
தினத்தந்தி 17 April 2021 4:17 PM GMT (Updated: 17 April 2021 4:17 PM GMT)

விழுப்புரத்தில் முதியவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.5.65 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

பணம் மோசடி

விழுப்புரம் அருகே உள்ள ஆசாரங்குப்பத்தை சேர்ந்தவர் வடமலை(வயது 65). இவர் கடந்த மாதம் 9-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் தனது வங்கி கணக்கில் உள்ள இருப்பு விவரத்தை பார்க்க நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், தான் உங்களது பண இருப்பு விவரத்தை பார்த்து சொல்வதாக கூறி அவரிடமிருந்து ஏ.டி.எம். கார்டையும் 4 இலக்க ரகசிய எண்ணையும் பெற்றார். உதவி செய்வதுபோல் நடித்த அந்த பெண், சிறிது நேரத்தில் அந்த ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக போலி ஏ.டி.எம். கார்டை வடமலையிடம் கொடுத்துவிட்டு சென்றார்.  பின்னர் வடமலை ஒரு மாதம் கழித்து பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை. அப்போதுதான், அந்த பெண் வடமலையின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வடமலை, இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணை

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர், போலீசார் நித்யகுமார், சவுந்தரபாண்டியன், மங்கலட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இந்த மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தினர். 
விசாரணையில், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே உள்ள கூத்தூர் குடித்தெருவை சேர்ந்த ராமர் மனைவி சீத்தாலட்சுமி (43) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 

பெண் கைது

இந்நிலையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நின்றிருந்த சீத்தாலட்சுமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வடமலையை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தின் மூலம் நகைகள் வாங்கியதாக கூறினார். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.5 லட்சத்து 2 ஆயிரம் மதிப்புள்ள 13½ பவுன் நகைகளையும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சீத்தாலட்சுமியை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான சீத்தாலட்சுமி மீது திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மையத்தில் பணம் மோசடி செய்ததாக 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story