மீன்பிடி தடைகாலம் எதிரொலி; சென்னையில் மீன்கள் விலை அதிகரிப்பு; விற்பனை மந்தம் என வியாபாரிகள் கவலை


மீன்பிடி தடைகாலம் எதிரொலி; சென்னையில் மீன்கள் விலை அதிகரிப்பு; விற்பனை மந்தம் என வியாபாரிகள் கவலை
x
தினத்தந்தி 19 April 2021 9:50 AM GMT (Updated: 19 April 2021 9:50 AM GMT)

மீன்பிடி தடைகாலம் எதிரொலியாக சென்னையில் மீன்கள் விலை ஓரளவு உயர்ந்து வருகிறது. அதேவேளை விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

மீன்பிடி தடைகாலம்
இந்தியாவில் கடல் வளம் மற்றும் மீன் வளத்தை பாதுகாப்பதற்காகவும், மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்கும் வகையிலும் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஓடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. வருகிற ஜூன் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை 61 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.மீன்பிடி தடைகாலம் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வடமாநிலங்களில் இருந்தே 
தற்போது தமிழகத்துக்கு மீன்கள் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

விலை அதிகரிக்க வாய்ப்பு
சென்னையில் வானகரம், காசிமேடு, எண்ணூர், சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கியமான மீன் மார்க்கெட்டுகளுக்கு குளச்சல் தொடங்கி மும்பை 
வரையிலான கடலோர பகுதிகளில் அதாவது வடமாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் மீன்களின் விலை ரூ.10-ல் இருந்து ரூ.20 வரை உயர்ந்திருக்கிறது.இதுகுறித்து சென்னை வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி துரை கூறும்போது, ‘‘தமிழகத்தில் மீன் பிடிக்க அனுமதி இல்லாததாலும், வெளி சந்தைகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுவதாலும் தேவை காரணமாக மீன்களின் விலை ஓரளவு அதிகரித்து இருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. அதேவேளை கொரோனா சூழலால் மக்கள் நடமாட்டம் முன்புபோல இல்லாததால் விற்பனை மந்தமாகவே இருக்கிறது’’ என்றார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
வானகரம் மீன் மார்க்கெட்டில் முக கவசம் இல்லாமல் வருவோருக்கு மீன்கள் விற்பனை இல்லை என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது. பொதுமக்களும் வரிசையில் நின்று மீன்கள் வாங்கி செல்கிறார்கள். அவ்வப்போது போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் கூட்டம் சேராதவாறு பார்த்து கொள்கிறார்கள். இதேபோல இதர மீன் மார்க்கெட்டுகளிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது.

வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் நேற்றைய விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-

விலை நிலவரம்

சங்கரா (சிறியது) -ரூ.120 முதல் ரூ.130 வரை, சங்கரா (பெரியது) -ரூ.180 முதல் ரூ.200 வரை, நெத்திலி (சிறியது) -ரூ.70 முதல் ரூ.80 வரை, நெத்திலி (பெரியது) -ரூ.110 முதல் ரூ.120 வரை, வஞ்சீரம் (சிறியது) -ரூ.400 முதல் ரூ.500 வரை, வஞ்சீரம் (பெரியது) -ரூ.600 முதல் ரூ.700 வரை, இறால் (சிறியது) -ரூ.180 முதல் ரூ.190 வரை, இறால் (பெரியது) -ரூ.240, நண்டு (சிறியது) -ரூ.120 முதல் ரூ.130 வரை, நண்டு (பெரியது) -ரூ.150 முதல் ரூ.180 வரை, சீலா-ரூ.300, ஏரி வவ்வால்-ரூ.90 முதல் ரூ.100 வரை, கட்லா (ரோகு) -ரூ.110 முதல் ரூ.120 வரை, கவளை-ரூ.50 முதல் ரூ.60 வரை, வவ்வால்-ரூ.500 முதல் ரூ.600 வரை, கிளிச்சை-ரூ.60, அயிலா-ரூ.150, தும்புலி (சிறியது) -ரூ.60 முதல் ரூ.70 வரை, தும்புலி (பெரியது) -ரூ.90 முதல் ரூ.100 வரை.

வாகன கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிச்சந்தையில் மீன்களின் விலை ரூ.30 முதல் ரூ.50 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story