கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டியில் உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டியில் உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 April 2021 11:30 PM IST (Updated: 21 April 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டியில் உரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி, 

உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புயல் மழை பாதிப்புக்கான எஞ்சிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பருவம் தவறிய மழைக்கான நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டும் வழங்கப்படாததை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் மணியன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, ஒன்றிய துணை செயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கேசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

திருத்துறைப்பூண்டி

அதேபோல திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாலு, ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகரத்தலைவர் பக்கிரிசாமி, நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் வையாபுரி, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உரவிலையை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பாரதிமோகன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மன்னார்குடி

மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் ராஜ்குமார், நகர செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு உர விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

கோட்டூர்

கோட்டூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பரந்தாமன், ஒன்றிய செயலாளர் அறிவுடைநம்பி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியசெயலாளர் மாரிமுத்து ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர் சவுந்தரராஜன், கோட்டூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு, உரம் விலையை கட்டுப்படுத்தக்கோரி கோஷம் எழுப்பினர்.

Next Story