ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு


ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்-கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 22 April 2021 6:17 PM GMT (Updated: 22 April 2021 6:17 PM GMT)

கிராம பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்

சிவகங்கை,

கிராம பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்

ஆய்வு கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைைம தாங்கினார். இதில் கலெக்டர் பேசியதாவது:-
கிராமப்பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து தினமும் பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்குவதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். கூடுதல் தேவைகள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அங்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கலாம். அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டாலோ அல்லது பழுதுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். அப்போது தான் குடிநீர் தாமதமின்றி வினியோகிக்க முடியும். அது மட்டுமின்றி நடைபெற்று வரும் சாலைப்பணிகள், தெருவிளக்கு, குடிநீர் கட்டிடப் பணிகளையும் விரைவாக நடத்தி முடிக்க வேண்டும்.

பயனாளிகள் விவரம்

கூடுதல் வகுப்பறைக் கட்டிடம், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடப்பணிகள் ஆகியவற்றினை கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தி முடிக்க வேண்டும். கோடை மழையினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிலுவையில் உள்ள மரக்கன்று நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் பட்டா இல்லாத பயனாளிகளின் விவரம் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story