18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி; மராட்டியத்தில் நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகள் 15 நாள் நீட்டிப்பு; மந்திரி சபை கூட்டத்தில் முடிவு


முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
x
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
தினத்தந்தி 29 April 2021 6:34 AM IST (Updated: 29 April 2021 6:34 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நடைமுறையில் இருக்கும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்றும் மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.

கடும் கட்டுப்பாடுகள்
மாநிலத்தில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ள நிலையில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.இந்தநிலையில் கொரோனாவின் கொட்டத்தை ஒடுக்க கடந்த 14-ந் தேதி இரவு 8 மணி முதல் மே 1-ந் தேதி காலை 7 மணி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. பொது போக்குவரத்துகளில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டு உள்ளன.

விலக்கு
பால், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டும் திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. வீட்டு டெலிவரி சேவைக்கு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டு உள்ளது.கட்டுப்பாடுகளை மீறுபவர்களை போலீசார் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

15 நாட்களுக்கு நீட்டிப்பு
இந்தநிலையில் மராட்டியத்தில் நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான முடிவு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.மந்திரி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு வெளியே வந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

இலவச தடுப்பூசி

மேலும் மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போட மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுபவர்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.மாநிலத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான மக்கள் தொகை 5 கோடியே 71 லட்சமாக உள்ளது. எனவே இவர்ளுக்கு இலவச தடுப்பூசி போட ரூ.6,500 கோடி செலவு ஆகும். ஆனாலும் மக்கள் நலன் கருதி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story