ஏரல் அருகே கொற்கையில் அகழாய்வு: பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம் கண்டுபிடிப்பு


ஏரல் அருகே கொற்கையில் அகழாய்வு:  பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 29 April 2021 3:54 PM GMT (Updated: 29 April 2021 3:54 PM GMT)

ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்ற அகழாய்வில் பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏரல்:
ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்ற அகழாய்வில் பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம் கண்டுபிடிக்கப்பட்டது.

அகழாய்வு

தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏரல் அருகே கொற்கையிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக கொற்கையில் 11 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை இயக்குனர் தங்கதுரை தலைமையிலான குழுவினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.

பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம்

கொற்கையில் தோண்டப்பட்ட குழியில் பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அங்கு பழமையான சங்கு அறுக்கும் கூடம் இருந்ததும் தெரிய வந்தது. அகழாய்வின்போது பழமைவாய்ந்த பெரிய அளவிலான செங்கற்கள் கிடைத்தன.

மேலும் சங்குகள், சங்கு வளையல் துண்டுகள், இரும்பு உருக்கு துண்டுகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், கீறல்கள், குறியீடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

2,800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது

பண்டைய காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும், துறைமுக நகராகவும் வியாபார தலமாகவும் கொற்கை சிறப்புற்று விளங்கியது. கடந்த 1968-1969-ம் ஆண்டுகளிலும் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், கொற்கையில் அகழாய்வு நடைபெற்றது. அப்போதும் எண்ணற்ற பழங்கால பொருட்கள், நாணயங்கள், சங்குகள் போன்றவை கண்டறியப்பட்டன.

தற்போது கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கல் கட்டுமானமும், சங்கு அறுக்கும் கூடமும் கண்டறியப்பட்டது. இங்கு கடலில் இருந்து எடுக்கப்பட்ட சங்குகளை பட்டைத்தீட்டி கலைநயமிக்க அலங்கார பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளனர்.

அகழாய்வின்போது, சங்குகளை பட்டை தீட்ட பயன்படுத்திய கற்களும் கண்டறியப்பட்டன. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story