நாளை ஓட்டு எண்ணிக்கை; நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு
நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நெல்லை, மே:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி நெல்லையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணும் மையம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் தொகுதி வாரியாக வைக்கப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணும் மையமான இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு துணை ராணுவத்தினர், போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவுப்படி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி நுழைவாயில் பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்கள், வாக்கு எண்ணிக்கை நடத்த உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அதனை பார்வையிட வரும் வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டைகளை சரிபார்த்து உள்ளே அனுப்பி வைக்கிறார்கள்.
தடுப்பு கட்டைகள் அமைப்பு
வாக்கு எண்ணும் மையத்துக்குள் தொகுதி வாரியாக அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் செல்லும் வகையில் தடுப்பு கட்டைகளால் அடைக்கப்பட்டு உள்ளது. அந்தந்த தொகுதி அதிகாரிகள், முகவர்கள் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று வழியில் வேறு தொகுதிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், போலீசார் வரிசையாக நிறுத்தப்படுகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.
அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தை சுற்றிலும் யாரும் அனுமதி இன்றி உள்ளே நுழையாமல் தடுக்கும் வகையில் நாலாபுறமும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது போலீசார் தொலைநோக்கி மூலம் பார்த்து கண்காணித்து வருகின்றனர்.
பட்டாசு வெடிக்க தடை
கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால், தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பட்டாசு வெடிப்பதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிப்பதற்காகவும், விதிமீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Related Tags :
Next Story