வழக்கு விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும்; ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் உறுதி


வழக்கு விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும்; ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் உறுதி
x
தினத்தந்தி 1 May 2021 10:02 AM IST (Updated: 1 May 2021 10:02 AM IST)
t-max-icont-min-icon

வழக்கு குறித்த விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரியப்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

கள்ளநோட்டு கும்பல்

சென்னையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஒரு கும்பலை யானைக்கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபனா கைது செய்தார். இந்த வழக்கில் கைதான செல்லிராம் குமார் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் ஆஜராகும் அரசு குற்றவியல் வக்கீலுக்கு வழக்கு குறித்த விவரங்களை இன்ஸ்பெக்டர் தெரிவிக்கவில்லை என்ற தகவல் நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

கமிஷனர் விளக்கம்

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். அவரிடம் நீதிபதி, ‘வழக்கு குறித்து அரசு தரப்பு வக்கீல்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் தெரிவிப்பது இல்லை. இதனால் விசாரணை பாதிக்கப்படுகிறது’ என்றார்.

அதற்கு போலீஸ் கமிஷனர், ‘இந்த வழக்கை பொறுத்தவரை 4 நாட்களுக்கு முன்பாகவே வழக்கு விவரங்கள் அரசு தரப்பு வக்கீலுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதில் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனிமேல், வழக்கு குறித்த விவரங்கள் அரசு தரப்பு வக்கீலுக்கு முறையாக தெரிவிக்கப்படும்’ என்றார். போலீஸ் கமிஷனர் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார்.

ஜாமீன்

அதையடுத்து, ஜாமீன் மனுவை நீதிபதி விசாரித்தார். பின்னர், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவும்விதமாக தலா ரூ.2.50 லட்சத்தை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மனுதாரர்கள் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

 


Next Story