விழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் மூடல் அசைவ பிரியர்கள் தவிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் மூடல் அசைவ பிரியர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 1 May 2021 4:54 PM GMT (Updated: 1 May 2021 4:54 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் இறைச்சி, மீன் மார்க்கெட்கள் நேற்று மூடப்பட்டு இருந்தது.

விழுப்புரம், 


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அந்நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது இறைச்சி கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் அசைவ பிரியர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு சனிக்கிழமையே இறைச்சி, மீன்களை வீட்டில் வாங்கி வைத்து விட்டனர்.

இதனால் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதால் சனிக்கிழமையும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இறைச்சி கடைகள் மூடல்

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இறைச்சி கடைகள், மீன் கடைகள், மீன் மார்க்கெட்டுகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. அதுபோல் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் இயங்காது என்பதால் அசைவ பிரியர்கள் பலர் நேற்று முன்தினமே இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான அசைவ வகைகளை வாங்கிச்சென்றனர். 


நேற்று முன்தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகளில் திருவிழா கூட்டம்போல் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் நேற்று இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் மூடப்பட்டிருந்ததால் அந்த கடைகள் சார்ந்த பகுதி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது. இதனால் அசைவ பிரியர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.

Next Story