மேற்கூரை வசதி இல்லாததால் வெயிலில் நிற்கும் வாகனங்கள்


மேற்கூரை வசதி இல்லாததால் வெயிலில் நிற்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 3 May 2021 7:21 PM GMT (Updated: 3 May 2021 7:21 PM GMT)

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை, அடிப்படை வசதி இல்லாததால் வெயிலிலும், மழையிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை, அடிப்படை வசதி இல்லாததால் வெயிலிலும், மழையிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்துமிடம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான உள்ளூர், வெளியூர் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக புதிய பஸ் நிலையம் பின்புறம் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் நிறுத்துமிடம் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது. 
இங்கு மோட்டார் சைக்கிள் வாகனத்திற்கு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாகன நிறுத்துமிடத்தில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. வாகன நிறுத்துமிடத்தில் இருக்கும் 2 நிழற்குடையில் பல காலமாக எடுக்கப்படாத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் நிறுத்தப்படும் வாகனங்கள் கொளுத்தும் வெயிலிலும் பாதிப்படைந்து வருகின்றன.
வருவாய் இழப்பு
இதுதவிர புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினால் நடத்தப்படும் கழிப்பறை கடந்த ஆண்டு முதல் ஏலம் விடப்படாமல் உள்ளது. இதனால் நகராட்சிக்கு புதிய பஸ் நிலைய கழிப்பறை மூலம் மட்டும் சுமார் ரூ.25 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கழிப்பறை செல்ல பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல அரண்மனை பகுதியில் உள்ள கழிப்பறையும், புதிய பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் குத்தகை உரிமமும் ஏலம் விடப்படாமல் உள்ளது. கழிப்பறை, பஸ் நுழைவு கட்டணம் உள்ளிட்டவைகளை கடந்த ஆண்டு முதல் ஏலம் விடப்படாததால் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் புதிய பஸ்நிலைய வாகன நிறுத்துமிடத்தில் உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story