11 சட்டசபை தொகுதிகளில் 185 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு தபால் வாக்குகளில் 5,040 ஓட்டுகள் செல்லாதவை


11 சட்டசபை தொகுதிகளில் 185 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு தபால் வாக்குகளில் 5,040 ஓட்டுகள் செல்லாதவை
x
தினத்தந்தி 3 May 2021 11:19 PM GMT (Updated: 3 May 2021 11:19 PM GMT)

தபால் வாக்குகளில் 5,040 ஓட்டுகள் செல்லாதவை

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 185 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இதேபோல், தபால் வாக்குகளில் 5 ஆயிரத்து 40 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
207 வேட்பாளர்கள் போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய 11 சட்டசபை தொகுதிகளில் கடந்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன.
மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 207 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் அதிகபட்சமாக மேட்டூர், சேலம் ஆகிய தொகுதிகளில் தலா 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறைந்தபட்சமாக கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய தொகுதிகளில் தலா 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
185 பேர் டெபாசிட் இழந்தனர்
இந்தநிலையில், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில், கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை போலவே 10 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. சேலம் வடக்கு சட்டசபை தொகுதியில் மட்டும் தி.மு.க. வென்றது.
மேலும் 11 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட 207 வேட்பாளர்களில் 185 பேர், பதிவான வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறாததால் அவர்கள் டெபாசிட் இழந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 11 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தவிர வேறு யாரும் டெபாசிட் பெறவில்லை. டெபாசிட் இழந்தவர்கள் பட்டியலில் அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க. வேட்பாளர்களும் அடங்குவர்.
5,040 ஓட்டுகள் செல்லாதவை
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 35 ஆயிரத்து 370 அரசு ஊழியர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தபால் மூலம் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். தபால் வாக்குகளில் பல சரியாக பூர்த்தி செய்யப்படாமலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையெழுத்து இல்லாமலும் இருந்தது.
இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது சில காரணங்களால் 5 ஆயிரத்து 40  ஓட்டுகள் செல்லாதவை என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story