கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை


கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை
x
தினத்தந்தி 4 May 2021 8:29 PM GMT (Updated: 4 May 2021 8:29 PM GMT)

கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது. அதில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானல்: 

கொரோனா பரவல் எதிரொலியாக, சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

இந்தநிலையில் கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

 நேற்று அக்னி நட்சத்திரம் தொடக்க நாளில் அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. 

இதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் இரவு வரை விட்டுவிட்டு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 

கொடைக்கானலில் பெய்து வரும் மழையினால், கோடைகாலம் குளிர் காலம் போல உள்ளது. 

இதனால் பகல் நேரத்தில் குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடியே பொதுமக்கள் சென்றனர். 

இதற்கிடையே பலத்த மழை எதிரொலியாக நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

நட்சத்திர ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் வெள்ளிநீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. 

இதேபோல் கொடைக்கானல் பியர்சோழா அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கொடைக்கானல் மக்களுக்கு இந்த மழையும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story