சாமான்யராக இருந்து சாதனை படைத்து 4-வது முறையாக முதல்-அமைச்சர் மகுடம் சூடும் ரங்கசாமி


சாமான்யராக இருந்து சாதனை படைத்து 4-வது முறையாக முதல்-அமைச்சர் மகுடம் சூடும் ரங்கசாமி
x
தினத்தந்தி 7 May 2021 4:28 AM GMT (Updated: 7 May 2021 4:28 AM GMT)

புதுவையில் 4-வது முறையாக முதல்-அமைச்சராக ரங்கசாமி இன்று பதவியேற்கிறார்.

சாதனை கண்டவர்

சோதனைகளை எல்லாம் வீழ்த்தி சாதனை கண்டவர் என்றால் அது ரங்கசாமிதான். தேர்தல் களம் என்றால் ரங்கசாமிக்கு சர்க்கரை சாப்பிடுவது போன்றது. ஒரு சில தேர்தல்களில் வெற்றி வாய்ப்பினை இழந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றிகளையே ருசித்துள்ளார்.1990-ல் நடந்த தேர்தலில் முதன்முதலாக ரங்கசாமி காங்கிரஸ் கட்சி சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டார். எதிர்புறமாக முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் நின்றார்.

இந்த தேர்தலில் பெத்தபெருமாள் 9 ஆயிரத்து 503 வாக்குகள் பெற்றார். ரங்கசாமி 8ஆயிரத்து 521 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அப்போது அமைந்த ராமச்சந்திரன் தலைமையிலான அரசு 11 மாதங்களில் கவிழ்ந்தது.

வேளாண் அமைச்சர்

அதைத்தொடர்ந்து 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அதே தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி போட்டியிட்டார். அப்போதும் அவருக்கு எதிராக பெத்தபெருமாளே நின்றார். அந்த தேர்தலில் 12 ஆயிரத்து 545 வாக்குகள் பெற்று முதன்முதலாக வெற்றிக்கனி பறித்தார்.

பெத்தபெருமாள் 5 ஆயிரத்து 285 வாக்குகள் மட்டுமே பெற்றார். இருவருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 7 ஆயிரத்து 260. இதுதான் அந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் அதிகமான ஓட்டு வித்தியாசம் ஆகும்.

இதன் காரணமாகவே அப்போது அமைந்த வைத்திலிங்கம் தலைமையிலான அமைச்சரவையில் ரங்கசாமிக்கு விவசாய அமைச்சர் பதவி கிடைத்தது. அதன்பின் 1996-ல் காங்கிரசில் இருந்து த.மா.கா. பிரிந்துவிட்ட நிலையில் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் களம் கண்டார். அவர்மேல் கொண்ட அன்பின் காரணமாக ரங்கசாமியையே அப்போதும் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை. எனவே ஜானகிராமன் தலைமையிலான அமைச்சரவையில் ரங்கசாமி எதிர்வரிசையில் அமர்ந்தார்.

கல்வி அமைச்சர்

இந்தநிலையில் தி.மு.க. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை த.மா.கா. விலக்கி கொண்டதால் ஜானகிராமன் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் கவிழ்ந்தது.அதைத்தொடர்ந்து சண்முகம் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த அரசில் ரங்கசாமி கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். ஒருவருட காலம் அவர் சிறப்பாக பணியாற்றினார்.அதன்பின் புதுவையில் 2001 தேர்தலில் மும்முனைபோட்டி நிலவியது. ரங்கசாமியை எதிர்த்து ஐக்கிய ஜனதாதளம் சார்பில் பெத்தபெருமாள் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ரங்கசாமி 14 ஆயிரத்து 323 வாக்குகள் பெற்று வெற்றிகண்டார். பெத்தபெருமாள் 8 ஆயிரத்து 769 வாக்குகள் பெற்றார். அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் 5 ஆயிரத்து 554 ஆகும். இதுதான் அந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு இடையேயான அதிகபட்ச வாக்குவித்தியாசம் ஆகும்.

முதல்-அமைச்சர்

அதைத்தொடர்ந்து சண்முகம் தலைமையிலான கூட்டணி அரசில் ரங்கசாமி பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார். சுமார் 5 மாதம் சிறப்பாக பணியாற்றினார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த சண்முகம் பதவி விலகவே ரங்கசாமி முதல்முறையாக முதல்-அமைச்சராக தேர்வுசெய்யப்பட்டார். அவர் 4½ ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தார்.2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரைவிட 28ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிவாகை சூடினார்.இதுதான் இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பெற்ற அதிகபட்சமான வாக்குவித்தியாசம் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சாதனைகள் படைத்த ரங்கசாமி 3-வது முறையாக முதல்-அமைச்சர் பதவியேற்று உள்ளார். கடந்த 2011-ஆண்டு தேர்தலின்போது தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

மாநில கட்சி ஆட்சி

புதுவை மாநிலத்தில் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை தந்த மாநில கட்சி என்ற பெருமையையும் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் பெற்றது.அதன்பின் 2016-ல் நடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 5 ஆண்டுகள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ரங்கசாமி இருந்து வந்தார்.இந்த காலகட்டத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி கிடைக்காவிட்டாலும் ரங்கசாமி மனம் தளராமல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார்.பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றிபெற்றார். கூட்டணி கட்சியான பா.ஜ.க. 6 இடங்களில் வெற்றி பெற்றது.சாமான்யராக இருந்து சாதனை படைத்த ரங்கசாமி தற்போது புதுவை மாநிலத்தில் 4-வது முறையாக முதல்-அமைச்சராக மகுடம் சூட்டப்படுகிறார்.


Next Story