ஒரே நேரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
ஒரே நேரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு
ஒரே நேரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தொழிலாளி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் சின்னத்தம்பிபாளையம், கரட்டுப்பாளையம் ஜீவா செட் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 54). செங்கல் சூளை தொழிலாளி.
இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த 23 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் மனைவியை பிரிந்து விட்டார். பின்னர் கடந்த 18 ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்தநிலையில் ஓரிரு ஆண்டுக்கு முன்பு அந்த பெண்ணும் அண்ணாதுரையைவிட்டு பிரிந்து சென்று விட்டார்.
அதனால் தனியாக இருந்த அண்ணாதுரை, அவ்வப்போது அவருக்கு பழக்கமான பகுதிகளுக்கு சென்று அங்கு தெரிந்தவர்களிடம் பேசி வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 15-7-2020 அன்று மதியம் 1 மணி அளவில் அவருக்கு தெரிந்த நபர்களை சந்திக்க நகலூரையொட்டிய ஒரு கிராம பகுதிக்கு சென்றார்.
பாலியல் தொல்லை
அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் 9 வயது சிறுமிகள் 2 பேர் சேலையில் தூரி (ஊஞ்சல்) கட்டி விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அவர்களை பார்த்த அண்ணாதுரை தூரியில் வைத்து நான் ஆட்டி விடுகிறேன் என்று கூறினார். சிறுமிகளும் அவரை ஏற்கனவே தெரிந்த நபர் என்பதால் சரி என்று ஒப்புக்கொண்டனர். ஒரு சிறுமி தூரியில் உட்கார்ந்ததும் அவரை தள்ளி விடுவதுபோன்று உடலில் தொடக்கூடாத பகுதிகளில் கைகளை வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அந்த சிறுமி கீழே இறங்கி விட்டார். அது தெரியாத இன்னொரு சிறுமி தூரியில் உட்கார்ந்ததும் அதே போன்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
2 சிறுமிகளும் அங்கிருந்து ஓடிச்சென்று அவரவர் வீடுகளில் புகார் தெரிவித்தனர். அதை தெரிந்து கொண்ட அண்ணாதுரை அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
கைது
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரே நேரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணாதுரையை தேடிவந்தனர். அவர் பர்கூர் பகுதியில் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அந்தியூருக்கு கடந்த 23-11-2020 அன்று வந்தபோது அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பு
அதில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக போக்சோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டது. 2 பிரிவுகளிலும் தலா 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 2 பிரிவுகளிலும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக தலா 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் 2 பேருக்கும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தமிழக அரசு அளிக்கும் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரத்தை தீர்ப்பு வெளியான ஒரு மாத காலத்துக்குள் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தும் அந்த தீர்ப்பில் நீதிபதி ஆர்.மாலதி குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.
Related Tags :
Next Story