ராசிபுரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; தனியார் வங்கி ஊழியர் வீடு சூறை


ராசிபுரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; தனியார் வங்கி ஊழியர் வீடு சூறை
x
தினத்தந்தி 17 May 2021 6:20 PM GMT (Updated: 17 May 2021 6:20 PM GMT)

ராசிபுரத்தில் வாலிபரை கத்தியால் குத்தியதால், தனியார் வங்கி ஊழியர் வீடு சூறையாடப்பட்டது.

ராசிபுரம்:
தனியார் வங்கி ஊழியர்
ராசிபுரம் டவுன், கோனேரிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 22). இவர் தனியார் வங்கி ஒன்றில் பணம் வசூலிப்பவராக வேலை பார்த்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். லாரி டிரைவர். 
இவர்கள் 2 பேரும் மும்பையை சேர்ந்த ஒருவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். வீட்டின் கீழ்தளத்தில் லாரி டிரைவர் கோபாலகிருஷ்ணனும்,  முதல் தளத்தில் சூரிய பிரகாசும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கத்திக்குத்து
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தனியார் வங்கி ஊழியர் சூரிய பிரகாஷ் லாரி டிரைவரின் மகளிடம் ஜன்னல் வழியாக பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அந்த பெண்ணின் தாயார் மகளை கண்டித்துள்ளார். இதன் பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணின் அண்ணன் பரத் கிருஷ்ணன், உறவினர் அருள்ஜீவன் (19) ஆகியோர் சூரியபிரகாசிடம் அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து சூரியபிரகாஷ் அங்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சூரியபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வாலிபர் அருள் ஜீவனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அருள்ஜீவன் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அருள்ஜீவன், சூரிய பிரகாஷ் மீது ராசிபுரம் போலீசில் புகார் செய்தார்.
வீடு சூறை
இதனிடையே அருள் ஜீவன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சூரியபிரகாஷ் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டிலிருந்த டி.வி., மிக்சி, வாஷிங்மெஷின் உள்பட அனைத்து பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். இதுகுறித்து சூரியபிரகாசின் தாயார் சித்ரா ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். மேலும் கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த அருள்ஜீவனும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story