114 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று; கொட்டித்தீர்த்த கனமழை; மும்பையை தாக்கியது, ‘டவ்தே’ புயல்; கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம்


114 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று; கொட்டித்தீர்த்த கனமழை; மும்பையை தாக்கியது, ‘டவ்தே’ புயல்; கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம்
x
தினத்தந்தி 18 May 2021 10:59 AM GMT (Updated: 18 May 2021 10:59 AM GMT)

மும்பையை தாக்கிய டவ்தே புயல் காரணமாக 114 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. கடலோர மாவட்டங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டது.

தென்கிழக்கு அரபிக்கடலில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

‘டவ்தே’ புயல்
இந்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து கடந்த சனிக்கிழமை புயலாக மாறியது. இதற்கு ‘டவ்தே’ என்று பெயரிடப்பட்டது.இந்த புயல் காரணமாக தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டி ஒரு சில பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது. கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது. இதற்கிடையே புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக சென்று நாளை(செவ்வாய்க்கிழமை) குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.

தயார் நிலை
இந்த புயல் குஜராத் மற்றும் மராட்டியத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக குஜராத், மராட்டிய மாநில முதல்-மந்திரிகள், டாமன் டையு யூனியன் பிரதேச நிர்வாகியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கொரோனா நோயாளிகளை பாதுகாக்க தங்கு தடையற்ற மின்சாரம், ஆக்சிஜன் சப்ளையை உறுதி செய்யும்படியும் அமித்ஷா அறிவுறுத்தினார்.புயலை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை 
நடவடிக்கைகளை எடுத்தன. மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

கரையை தொட்டது
இந்தநிலையில் அதி தீவிரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்தது. புயல் வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒருநாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் கரையை நெருங்கியது. நள்ளிரவில் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் டையு அருகே சவுராஷ்டிரா கடற்கரையில் கரையை தொட்டு பயணிக்க தொடங்கியது.அப்போது சூறை காற்று சுழன்று அடித்ததால் குஜராத்தை ‘டவ்தே’ புயல் குதறி போட்டது. அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பேய் மழை காரணமாக பல இடங்கள் சின்னாபின்னமானது. ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன.முன்னதாக அங்கு புயல் தாக்கத்துக்கு உள்ளான பகுதிகளில் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மும்பையை தாக்கியது
முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து சென்றது. இதன் காரணமாக மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களான தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது.மும்பையில் நேற்று மதியம் மணிக்கு 114 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசியது. அது 120 கி.மீ. வேகமாக உயரும் என்று கருதப்பட்டது. இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நாட்டின் நிதி தலைநகர் மும்பை நிலைகுலைந்து போனது.

சாலைகளில் வெள்ளம்
பி.கே.சி.யில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா மெகா தடுப்பூசி மையம் காற்றில் பறந்தது. சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய பிளாஸ்டிக் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. காட்கோபரில் மின்சார ரெயில் மீது மரம் விழுந்தது. நாள் முழுவதும் மோனோ ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாந்திரா- ஒர்லி கடல் மேம்பாலம் மூடப்பட்டது. மேலும் மும்பை விமான நிலையமும் பல மணி நேரம் மூடப்பட்டது. எனவே மும்பை நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடலோர மாவட்டங்கள்
இதபோல மும்பை அருகே உள்ள இதர கடலோர மாவட்டங்களிலும் சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால், பெரும் சேதம் ஏற்பட்டது.கடந்த ஆண்டு இந்த ரத்னகிரி மாவட்டத்தை கபளீகரம் செய்த ‘நிகர்கா’ புயலை விட ஒப்பிடும் போது, இந்த புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் புயலின் காரணமாக பல வீடுகள் சேதமடைந்தன.கடற்கரை பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியதுடன், பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.பலத்த காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் முன் வினியோகம் பாதிப்புக்கு உள்ளாகிறது. பல இடங்கள் இருளில் மூழ்கின.இங்குள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு மழையால் சேதமடைந்தது. கட்டிடத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கசிய தொடங்கியது.இதனால் இங்கு தங்கவைக்கப்பட்டு இருந்த 
கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சிரமம் அடைந்தனர். முன்னதாக மராட்டியத்தில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தற்காலிக மையங்களில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருந்தனர். மேலும் கடலோரங்களில் வசித்து வந்த 12 ஆயிரத்து 420 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பிரதமர் மோடி உறுதி
புயல் சூறையாடிக்கொண்டு இருந்த நேரத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மீட்பு பணியை துரிதப்படுத்த தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று அவர் உறுதி அளித்தார்.இதற்கிடையே ‘டவ்தே’ புயல் காரணமாக கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

கோவா மாநிலத்திலும் புயலுக்கு பலத்த மழை பெய்தது. யூனியன் பிரதேசமான டாமன் டையுவும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

Next Story