பயிர் வளர்ச்சியை மேம்படுத்தும் பசுந்தாள் உரம் சாகுபடி செய்வதன் அவசியம் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்


பயிர் வளர்ச்சியை மேம்படுத்தும் பசுந்தாள் உரம் சாகுபடி செய்வதன் அவசியம் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்
x
தினத்தந்தி 18 May 2021 12:51 PM GMT (Updated: 18 May 2021 12:51 PM GMT)

பயிர் வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் பசுந்தாள் உரத்தை சாகுபடி செய்வதன் அவசியம் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நீடாமங்கலம்,

பசுந்தாள் உரமிடுவது மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக சணப்பை, சீமை, அகத்தி, சித்தகத்தி, தக்கைபூண்டு, மணிலாஅகத்தி, கொளுஞ்சி, பில்லிபெசரா, கிளைரிசிடியா போன்ற பசுந்தாள் உரங்கள் நெடுங்காலமாக நெல்வயலில் இடப்பட்டு வரப்பட்டவை. ஆனால் தற்போது பசுந்தாள் உரமிடுவது வெகுவாக குறைந்துவிட்டது. இன்று செயற்கை உரங்கள் விலை உயர்வால், பசுந்தாள் உரத்தின் தேவையை மறுபடியும் உணர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பசுந்தாள் உரப்பயிர்கள் பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியவை. மண்ணிற்கு தழைச்சத்து மட்டுமன்றி, மணிச்சத்தையும், சாம்பல் சத்தையும் சேர்த்து அளிக்கின்றன.

மண் வளம்

மண்ணின் வளத்தை பாதுகாக்கவும் பசுந்தாள் உரங்கள் பயன்படுகின்றன. பசுந்தாள் உரமிட்ட வயல்களில் உரமிடாத வயல்களைவிட அதிக விளைச்சல் பெறலாம்.

செயற்கை உரங்கள் இடுவதினால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளை பசுந்தாள் உரத்தை இட்டு சரிசெய்து கொள்ளலாம். எனவே பசுந்தாள் உர பயிர்களை விவசாயிகள் அதிக அளவு சாகுபடி செய்ய முன்வர வேண்டும். இவற்றை சாகுபடி செய்வதற்கான இடுபொருட்களின் தேவை குறைவு.

தழைச்சத்து

பசுந்தாள் உரப்பயிர் ஒன்றை நெல் சாகுபடி பயிர் திட்டத்தில் சேர்த்து அவைகளை நிலத்தில் மடக்கி உழ வேண்டியது மிகவும் அவசியம். தக்கைப்பூண்டு என்ற பசுந்தாள் உரப்பயிர் பாக்டீரியா முடிச்சுகளை வோ் பகுதிகளிலும் கொண்டிருப்பதால் அதிக தழைச்சத்தை ஆகாயத்தில் இருந்து கிரகித்து சேர்க்கின்றது.

விதைத்த 45-ம் நாளில் பூக்கும் இப்பயிரை மடக்கி உழுதால், எக்டேருக்கு 20.4 முதல் 24.9 டன் வரை பசுந்தாளும், 146 முதல் 219 கிலோ தழைச்சத்தும் கிடைக்கிறது. இதை நெல் வயல்களில் நட்டு 45-60 நாட்களில் அறுவடை செய்து நிலத்தில் மிதித்து விடலாம். இரண்டாம் போக நெல் பயிரை நடவும் செய்யலாம். இதனால் எக்டேருக்கு 15 டன் தழை உரமும், 13 கிலோ தழைச்சத்தும் கிடைக்கிறது.

ரசாயன உரத்துக்கு இணையான...

தக்கைப்பூண்டு பசுந்தாள் உர பயிரை நெல் சாகுபடிக்கு முன்னும், இருபருவ நெல்பயிருக்கு இடையில் உள்ள காலத்திலும் பயிர்செய்து உரமாக பயன்படுத்தினால் ரசாயன உரத்துக்கு இணையான 50 கிலோ தழைச்சத்தை தருகிறது.

இவ்வாறு வேளாண் விஞ்ஞானிகள் கூறினர்.

Next Story