கோட்டூர் அருகே கெழுவத்தூர் -மானங்காத்தான் கோட்டகம் சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


கோட்டூர் அருகே கெழுவத்தூர் -மானங்காத்தான் கோட்டகம் சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 19 May 2021 1:50 PM GMT (Updated: 19 May 2021 1:50 PM GMT)

கோட்டூர் அருகே கெழுவத்தூர்- மானங்காத்தான் கோட்டகம் சாைலயை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கெழுவத்தூர், மானங்காத்தான் கோட்டகம் ஆகிய கிராமங்களில் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களின் பிரதான சாலையாக கெழுவத்தூர்-மானங்காத்தான் கோட்டகம் சாலை உள்ளது.

இந்த சாலை மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் கெழுவத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மானங்காத்தான் கோட்டகம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது.

பெரும்பள்ளங்கள்

சாலையில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடப்பதால் நடந்து செல்வதற்கே சிரமமாக உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலை நெடுகிலும் பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன.

போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலையை பயன்படுத்தும் முதியவர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ஆம்புலன்ஸ் கூட இந்த சாலையை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story