விருத்தாசலத்தில் முழு ஊரடங்கை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் அசைவ பிரியர்கள் படையெடுத்ததால் பரபரப்பு


விருத்தாசலத்தில் முழு ஊரடங்கை மீறி இயங்கிய இறைச்சி கடைகள் அசைவ பிரியர்கள் படையெடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 May 2021 6:19 PM GMT (Updated: 30 May 2021 6:19 PM GMT)

விருத்தாசலத்தில் முழு ஊரடங்கை மீறி இறைச்சி கடைகள் இயங்கின. அங்கு அசைவ பிரியர்கள் படையெடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 


கொரோனா என்னும் சங்கிலியை உடைத்து எறியவே அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை ஒழித்து, அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.  

ஆனால், சிலர் எனக்கென்ன என்று நினைத்து சுற்றித்திரிந்து வருவது கொரோனா தொற்றை மேலும் அதிகரிக்க வழி செய்வதாக அமைந்து விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் நேற்று விருத்தாசலத்தில் நடந்துள்ளது.

இறைச்சி கடை

விருத்தாசலம் மார்க்கெட் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு இறைச்சி கடை மற்றும் மீன் கடை, கருவாடு கடை ஆகியன திறந்து இருந்தது.
இதுபற்றி அறிந்த அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்குவதற்காக அங்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் விருத்தாசலம் நகரில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. 

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததால் அசைவ பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  உடனே போலீசார், இறைச்சி கடையின் அருகே சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வியாபாரி கள் கடையை மூடிவிட்டனர். போலீசார் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் வியாபாரிகள் மீண்டும் கடையை திறந்து தங்களது வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். 

கடும் நடவடிக்கை தேவை

இதுபோன்ற ஒருசிலரின் செயல்களால் கொரோனா தொற்று எப்போது குறைந்து, வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் என்று இயல்பு நிலைக்கு திரும்ப போகிறார்கள். 

தொற்றுக்கு எதிராக நாடே போராடிக்கொண்டு இருக்கிறது. மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் என்று முன்கள பணியளார்கள் தொற்றுக்கு எதிராக தினசரி பெரும் போராட்டத்தையே நடத்தி கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் சிலர் ஊர் சுற்றி வருகிறார்கள். ஒருநாள் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாதா? என்று காட்டமான கேள்விகளை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

இவர்களை போன்றவர்களின் பொறுப்பற்ற செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக நலனின் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story