நல்லம்பள்ளி அருகே லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை ெபாருட்கள் பறிமுதல் டிரைவர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு


நல்லம்பள்ளி அருகே லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை ெபாருட்கள் பறிமுதல் டிரைவர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 May 2021 11:55 PM GMT (Updated: 30 May 2021 11:56 PM GMT)

நல்லம்பள்ளி அருகே லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

நல்லம்பள்ளி,

பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூருக்கு உமிபாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. லாரி டிரைவர் தொப்பூர் போலீஸ் சோதனைச்சாவடி பகுதியில் வந்ததும், தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லாமல், தொப்பூர் காவலர் குடியிருப்பு முன்புள்ள மேட்டூருக்கு செல்லும் கிராம சாலையில் செல்ல முயன்றார். 

இதனை கண்ட தொப்பூர் போலீசார் உடனடியாக அந்த லாரியை மடக்கி பிடித்து நிறுத்தினர். அப்போது அந்த லாரியில் டிரைவருடன் வந்த ஒருவர் குதித்து அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து லாரி முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உமிபாரத்தின் அடிப்பகுதியில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. 

வலைவீச்சு

பின்னர் ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் வெள்ளப்பம்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 36) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் லாரியில் இருந்து தப்பியோடிய சரவணன் என்பவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story