மருந்துக் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்றால் நடவடிக்கை


மருந்துக் கடைகளில் காலாவதியான  உணவு பொருட்கள் விற்றால் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 May 2021 6:42 PM GMT (Updated: 31 May 2021 6:42 PM GMT)

மருந்துக்கடைகளில் காலாவதியான பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேரையூர்,
மருந்துக்கடைகளில் காலாவதியான பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
27 பேர் மீது வழக்கு
பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் உத்தரவின்பேரில், பேரையூர் போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி, பேரையூர், சாப்டூர், சேடப்பட்டி, நாகையாபுரம், வில்லூர், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஊரடங்கை மீறி டீ கடைகள், பெட்டிக்கடைகள் திறந்தது மற்றும் இருசக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றது ஆகிய விதிமீறல்களுக்காக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முகக் கவசம் அணியாத 42 நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளி பின்பற்றாத 7 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் பேரையூர் தாலுகா பறக்கும் படை துணை தாசில்தார் வீரமுருகன், தலைமை காவலர் ராஜேஷ், ஆகியோர் கொேரானா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
அப்போது பேக்கரி கடை குடோன் ஒன்றில் சமூக இடைவெளி இல்லாமல் பணி புரிந்ததற்காக குடோன் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறி திறந்திருந்த பல சரக்கு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
எச்சரிக்கை
இது குறித்து துணை தாசில்தார் வீரமுருகன் கூறுகையில், மருந்து கடைகளில் காலாவதியான பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மேலும் டாக்டரின் அனுமதிச்சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது, காய்கறி விற்கும் வேன்களில் காய்கறி விலைப்பட்டியல் வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story