தனியார் தொழிற்சாலைகளில் மீண்டும் தேயிலைத்தூள் உற்பத்தி தொடக்கம்


தனியார் தொழிற்சாலைகளில் மீண்டும் தேயிலைத்தூள் உற்பத்தி தொடக்கம்
x
தினத்தந்தி 10 Jun 2021 5:18 PM GMT (Updated: 10 Jun 2021 5:20 PM GMT)

கூடலூர் பகுதியில், ஒரு வாரத்துக்கு பிறகு தனியார் தொழிற்சாலைகளில் மீண்டும் தேயிலைத்தூள் உற்பத்தி தொடங்கி உள்ளது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. மேலும் பொதுமக்கள் மட்டுமின்றி தேயிலை தொழிலாளர்களையும் கொரோனா தொற்று பாதித்தது. இது தொடர்பாக கூடலூர் பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். 

அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பல தொழிலாளர்கள் பணிக்கு வருவது தெரியவந்தது. உடனே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூடலூர் பகுதியில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்பட்டது.

இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் தொழிற்சாலைகள் இயங்காததால் பச்சை தேயிலை முதிர்ச்சி அடைவதாக விவசாயிகள் கவலை அடைந்தனர். 
இதனால் தொழிற்சாலைகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. 

இருப்பினும் தொற்று பரவல் காரணமாக தொழிற்சாலைகளை திறக்க அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. கோடை காலம் முடிவடைந்து பருவமழை பெய்ய தொடங்கி உள்ள சமயத்தில் பச்சை தேயிலை மகசூல் நன்கு அதிகரிக்கும் நிலையில் தொழிற்சாலைகளை மூடியதால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக சிறு விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் ஒரு வாரத்துக்கு பிறகு தனியார் தேயிலை தொழிற்சாலைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு, தேயிலைத்தூள் உற்பத்தி தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

ஆனால் கூடலூர் 2-மைல் பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை திறக்கப்படவில்லை. எனவே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு தொழிற்சாலையை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story